மகளிர் உரிமை தொகையை விமர்சித்த நிர்மலா சீதாராமன்..ஊறுகாய் விமர்சனங்களுக்கு கடும் பதிலடி
சென்னை: ஊறுகாய் போடுவதை தரக்குறைவாக நினைத்ததில்லை. ஊறுகாய் போடுபவர்கள் நிதி அமைச்சராக போகக்கூடாது என்று இருந்தால் நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அப்படி எதுவும் இல்லையே எனவே, ஊறுகாய் போடுபவரா?, இல்லையா? என்கிற சர்ச்சையை விட்டுவிட்டு, இன்றைய காலகட்டத்தில் ஜி.எஸ்.டி.யில் இதுபோன்ற ஒரு மாற்றத்தை கொண்டுவர நாடு தயாராக இருக்கிறதா? என்று பேசினாலே பதில் கிடைத்துவிடும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் ரெவென்யூ பார் அசோசியேஷன்' என்ற வக்கீல்கள் அமைப்பு சார்பாக கருத்தரங்கம் ஒன்று நேற்று நடந்தது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அதன்பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு அவர் பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியை கண்டு உலகமே வியக்கிறது. ஒரே நாடு ஒரே வரி சாத்தியமா? என்ற கேள்விக்கு உடனடியாக பதில் வரவில்லை என்றால், இந்த அம்மா நிதித்துறை அமைச்சகத்தில் என்னங்க பண்ணும், அவங்களை இறக்குங்கள் முதலில் என்று சொல்வார்கள். இவற்றை பார்க்கும்போது எனக்கே சில சமயங்களில் சிரிப்பு வரும்.
ஊறுகாய் போட்டுட்டு இருந்த அம்மாவை கொண்டு நிதி அமைச்சராக்கி விட்டார்கள் என்று தாராளமாக சொல்லுங்கள். ஊறுகாய் போடுவதை நான் ஒரு போதும் தரக்குறைவாக நினைத்ததில்லை. ஊறுகாய் போடுபவர்கள் நிதியமைச்சராக போகக்கூடாது என்று இருந்தால் நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அப்படி எதுவும் இல்லையே. எனவே, ஊறுகாய் போடுபவரா?, இல்லையா? என்கிற சர்ச்சையை விட்டுவிட்டு, இன்றைய காலகட்டத்தில் ஜி.எஸ்.டி.யில் இதுபோன்ற ஒரு மாற்றத்தை கொண்டுவர நாடு தயாராக இருக்கிறதா? என்று பேசினால் நிச்சயம் பதில் கிடைத்துவிடும் என்றார்.
முன்னதாக ஜி.எஸ்.டி. குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் முதல்முறையாக ஜி.எஸ்.டி. தொடங்கப்பட்ட போது 15.3 சதவீதமாக இருந்த சராசரி வரி வருவாயானது 2023-ல் 12.2 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதாவது நாம் அதிக வரி வருவாயை சம்பாதித்த நிலையில் நிறைய வரிகளை குறைத்திருக்கிறோம். தற்போது, ஜி.எஸ்.டி. செலுத்துவோரின் எண்ணிக்கை 1.47 கோடியாக அதிகரித்து உள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது போதுமானது அல்ல . எனினும் இது ஜி.எஸ்.டி. தொடங்கப்பட்ட காலத்தைவிட 3 முதல் 4 சதவீதம் அதிகமாக உள்ளது.
ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோரில், 84 சதவீதம் பேர் ஜி.எஸ்.டி. சிறப்பானது என்று கருதுகிறார்கள். எனினும் ஜி.எஸ்.டி. இன்னும் ஒழுங்குமுறைபடுத்தப்படவில்லை என்றும் ஜி.எஸ்.டி. செலுத்துவது கடினம் என்றும் பொதுவான கருத்து நிலவுகிறது. நுகர்வோர் பொருட்களில் சுமார் 60 சதவீத பொருட்களுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவாகவே வரி விதிக்கப்படுகிறது. 18 முதல் 28 சதவீதம் வரிவிதிப்பில் இருந்து 3 பொருட்கள் 5 சதவீதம் வரி பட்டியலில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதுதான் ஜி.எஸ்.டி. எளிமைப்படுத்துதல் மற்றும் வரி குறைப்பு என்கிறோம்.
நேரடி வரி விதிப்பு முறையில் முன்பு எல்லாம் கூடுதலாக செலுத்திய வரி தொகையை திரும்பப் பெறுவதற்கு 93 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 10 நாட்களில் அது திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. 2014-ல் 3.9 கோடியாக இருந்த நேரடி வரிசெலுத்துவோரின் எண்ணிக்கையானது 2024-ல் 7.79 கோடியாக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் நேரடி வரிகளில் ஒரு வரி கூட அதிகரிக்கப்படவில்லை" இவ்வாறு கூறினார்..
இதனிடையே சென்னையில் நடைபெற்ற இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்நேற்று பங்கேற்றார். அப்போதுஅவர் பேசும் போது, 2047 ஆம் ஆண்டுக்குள் தலை சிறந்த இந்தியாவை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தொழில் தொடங்கும் பெண்களுக்கு 300க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் நாட்டில் இருக்கின்றன. அதனை பெண்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாடு தொடர்பாக பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வகுத்துள்ளார். பணத்தைத் தாண்டி பெண்களை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். பணத்தைத் தாண்டிய முன்னேற்றம் பெண்களுக்கு அவசியம் ஆகும்" என்றார். மகளிர் கையில் பணம் கொடுத்துவிட்டு பெண்களை முன்னேற்றுகிறேன் என்று பிரதமர் கூறவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மறைமுகமாக விமர்சித்தும் பேசினார்.












Click it and Unblock the Notifications