திடீரென முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்குச் சென்ற அமைச்சர் பிடிஆர்.. ஆடியோ + அமைச்சரவை.. என்ன நடக்குது?
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலினை, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். அமைச்சர் பிடிஆர் பேசியதாக ஒரு ஆடியோ பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த சூழலில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் வீட்டுக்கே சென்று சந்தித்துள்ளார் பிடிஆர்.
சமீபத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆங்கிலத்தில் பேசுவதாக இரண்டு ஆடியோகள் வெளியாகி தீயாகப் பரவியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது முன்னோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததை விட இந்த 2 ஆண்டுகளில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் சம்பாதித்து விட்டதாக பிடிஆர் பேசுவது போன்ற ஒரு ஆடியோ பாஜகவினரால் பரப்பப்பட்டது.
பிடிஆர் ஆடியோ சர்ச்சை : அதைத் தொடர்ந்து, பாஜகவிடம் பிடித்த விஷயமே ஒரு நபர், ஒரு பதவி என்ற கொள்கை தான். கட்சியில் ஒருவர், ஆட்சியில் ஒருவர், ஆனால், திமுகவில் எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர். இங்கு கட்சியே முதல்வரின் மகனும், மருமகனும் தான். தற்போது நான் பதவி விலகினால் எதிர் வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும் என பிடிஆர் பேசுவதாக இன்னொரு ஆடியோ வெளியானது.

அடுத்தடுத்து 2 ஆடியோக்கள் வெளியான நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோ பதிவு உண்மை இல்லை என மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த ஆடியோ க்ளிப் போலியாக ஜோடிக்கப்பட்டது என்றும், தான் இவ்வாறு யாரிடமும் நேரிலோ, தொலைபேசியிலோ பேசவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
அவசர சந்திப்பு : இதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி முதல்வரை நேரில் சந்தித்து பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில், பாஜகவினர் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சியில் ஊழல் நடப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலுவல் ரீதியான ஆலோசனை மேற்கொள்ளவே நிதி அமைச்சரை முதல்வர் அழைத்ததாக கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம்? : இதற்கிடையே, அமைச்சரவை மாற்றம் விரைவில் நடக்கக்கூடும் என்ற தகவலும் பரவி வருகிறது. புதிதாக 2 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளதாகவும், 2 அமைச்சர்கள் தூக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் பிடிஆர், திமுகவின் முக்கிய புள்ளிகள் பற்றிப் பேசியதாக உலா வரும் ஆடியோ - அமைச்சரவை மாற்றம் குறித்து பரவி வரும் தகவல் ஆகியவற்றிற்கு இடையே நடைபெற்றுள்ள இந்த அவசர சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications