ரூ 1000 உரிமைத் தொகை.. பயனாளிகளின் கைரேகை அவசியம்.. எங்கு விண்ணப்பிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ 1000 பெறும் பெண் பயனாளிகளின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை- கைவிரல் ரேகை பதிவு கட்டாயம். திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் போது பயனாளிகளின் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.

நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களை முறையாக சீரமைக்க வேண்டும். அனைத்து நியாய விலை கடைகளிலும் ரூ 1000 திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம். ஜூலை 17க்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை பதிவு கருவிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையான மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. எனவே இது இங்கு தொடங்கப்பட்டால் முன்னோடி திட்டமாக இருக்கும். இந்த திட்டத்தில் பயனாளிகளை மாவட்ட ஆட்சியர்கள் கொண்ட குழு தேர்வு செய்கிறது.

இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான டோக்கன் விரைவில் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படும் என தெரிகிறது. அந்த டோக்கனில் கூறியிருக்கும் தேதி, நேரத்திற்கு ரேஷன் கடைக்கு சென்றால் போதும். கடைகளில் முந்த வேண்டிய அவசியமே இல்லை. அந்த டோக்கனை வைத்து பயனாளிகள் ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து மீண்டும் ரேஷன் கடைகளில் கொடுத்துவிட வேண்டும்.

அந்த விண்ணப்பங்களை இந்த திட்டத்தின் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து பிறகு பயனாளிகளை அடையாளம் காண்பர். இந்த விண்ணப்பங்களில் பயனாளிகளின் ரேஷன் கார்டு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே ஒரு விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்தெல்லாம் பயன்படுத்த முடியாது.
எந்த பொருளும் வேண்டாம் என எழுதி கொடுத்திருப்பவர்களில் யாராவது உரிமைத் தொகை பெற விரும்பினால் அவர்களும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம். இவையெல்லாம் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும். விண்ணப்பங்களை வாங்கித் தருகிறேன், ஃபில்லப் செய்து தருகிறேன் என பெண்களை இடைத்தரகர்கள் ஏமாற்ற வேண்டிய வேலையே இருக்காது. காரணம் படிவத்தை வீட்டுக்கே சென்று கொடுக்கிறார்களே!












Click it and Unblock the Notifications