தமிழக மீனவர்களுக்கு வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.. வெளியுறவு அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு இதற்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ள 13 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11-7-2024) கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள், IND-TN-08-MM-364. IND-TN-16-MM-2043 IND-TN-08-MM-1478 ஆகிய பதிவெண்கள் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (11-7-2024) கைது செய்யப்பட்டுள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மீன்பிடித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நம் நாட்டு மீனவர்கள், வரலாறு காணாத நெருக்கடியை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தற்போது 173 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மீனவர்கள் இதுபோன்று சிறைபிடிக்கப்படுவது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதோடு, அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட வேண்டுமென்றும், இதுதொடர்பாக உரிய தூதரக நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டுமென்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications