வாவ்.. வியப்பா இருக்கு! மாமல்லபுரத்தை சுற்றி பார்த்து அசந்து போன வெளிநாட்டு செஸ் வீரர்கள்!
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்திருக்கும் வீரர்கள் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்து வருகின்றனர்.
இந்தியாவில் சர்வதேச செஸ் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து 4 மாதங்களுக்கு முன்னர்தான் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக முன்னெடுத்தது. அதன் அடிப்படையில் போட்டி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போட்டிக்கு வந்த வீரர்கள் மாமல்லபுரத்தை சுற்றி பார்த்து ரசித்து வருகின்றனர். முன்னதாக சீன அதிபர் இந்தியாவுக்கு வருகை தர இருந்த நிலையில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை மாமல்லபுரத்தில் வைத்து நடத்தலாம் என திட்டமிடப்பட்டு இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு இனிதே நடந்து முடிந்தது. இதனையடுத்து மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்த்திருந்தது.

கருப்பு
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரெசார்ட்டில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியுள்ளது. சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 28ம் தேதி தொடங்கிய கோலாகல விழாவில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அப்போது, இந்திய அணியினருக்கு கருப்பு காய்களை பிரதமர் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய வீரர், வீராங்கனைகள் கருப்பு காய்களைக் கொண்டு விளையாட்டை தொடங்கினர்.

இரண்டாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே சென்னை போட்டிக்குத்தான் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்றுள்ளன. உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஒலிம்பியாட் போட்டி மொத்தம் 11 சுற்றுகளைக் கொண்டது. கிளாசிக்கல் ஸ்விஸ் லீக் முறையில் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்), உலக செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் நடத்தி வருகிறது.

முதலிடம்
இந்நிலையில், கடந்த 29ம் தேதி முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஓபன் பிரிவிலும், மகளிர் பிரிவிலும் முதல் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்றன. ஒலிம்பியாட் போட்டியின் முதல் வெற்றியை ஓபன் பிரிவில் இந்தியா பி அணிக்காக விளையாடிய ரவுனக் சாத்வானி பதிவு செய்தார். அவர் தனது 36-வது நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை சாய்த்து முதல் வெற்றியை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, இந்திய பி மகளிர் அணி சிறப்பாக விளையாடி, வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தற்போது இந்திய ஆடவர் அணி 11வது இடத்திலும், பெண்கள் அணியின் A பிரிவு தொடர்ந்து முதல் இடத்திலும் உள்ளது.

சுற்றுலா
போட்டி இவ்வாறு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கையில், இந்தியாவிடமிருந்து தாங்கள் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக ஹங்கேரி செஸ் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராபர்ட் கப்பாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எங்கள் நாட்டில் அடுத்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் அதை எப்படி சிறப்பாக நடத்துவது என்பது குறித்து அறிந்துகொள்ள எங்கள் அணி இந்த போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொண்டது" என்று கூறினார். மேலும், "தற்போது சென்னையில் நடைபெற்று வரும் போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. போட்டி குறித்து சென்னையின் கடைக்கோடி மக்களுக்கும் தகவல் சென்று சேர்ந்துள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது. போட்டி நடைபெறும் இடம், பங்கேற்பாளர்களுக்கான தங்கும் வசதிகள், அவர்களுக்கான போக்குவரத்து உள்ளிட்டவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளன." என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் போட்டிக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் மாமல்லபுரத்தை சுற்றி பார்த்து வருகின்றனர்.
Recommended Video

சிறப்புகள்
மாமல்லபுரத்தில் பல சிறப்பு வாய்ந்த கட்டங்கள் உள்ளன. அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம். குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள். ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன. மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்தவை பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. தற்போது இங்கு உள்ள தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications