அந்நிய செலவாணி மோசடி! டிடிவி தினகரனிடம் அபராதம் வசூலிக்க கோரிய வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்
சென்னை: அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரனுக்கு விதிக்கப்பட்ட 31 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் அவரை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக டிடிவி தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளராக இருப்பவர் டிடிவி தினகரன். இந்நிலையில் தான் டிடிவி தினகரன் மீது அன்னிய செலவாணி மோசடி வழக்கு உள்ளது.

அதாவது டிடிவி அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகவும், அவருக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் அமலாக்கத்துறை இயக்குனர் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அன்னிய செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இருப்பினும் டிடிவி தினகரனிடம் இருந்து அபராத தொகையை வசூலிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் தான் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த எஸ். பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் டிடிவி தினகரனிடம் இருந்த அபாராத தொகையை அமலாக்கத்துறை வசூலிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அவரிடம் இருந்து அபராதத்தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, டிடிவி தினகரனிடம் 31 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதா? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு, இதுகுறித்து விளக்கம் அளிக்க முடியாது என்று அமலாக்கத்துறை இயக்குனர் பதில் அளித்துள்ளதாகவும், அபராதத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளையபெருமாள் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து டிடிவி தினகரன் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அப்போது அபராதத்தை வசூலிக்க அமலாக்கத்துறை இயக்குனர் எடுத்த நடவடிக்கையை எதிர்த்து சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னை திவாலானவர் என்று அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications