சென்னை மெட்ரோவில் இலவச ரவுண்டு.. நாளை யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்.. கட்டணமில்லா பயணம் தரும் சர்ப்ரைஸ்
சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்கள் தங்களின் இலக்கை அடைய மெட்ரோ ரயில் சேவை ஒரு வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது.. குறிப்பாக பெரிய அளவிலான பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து அசத்தி வருகிறது.. அந்த வகையில், நாளை சென்னையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.. அது ஏன் தெரியுமா?
பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி பங்கேற்கும் நேரடி இசை நிகழ்ச்சி, நாளை 07.03.2026 (சனிக்கிழமை) அன்று சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள YMCA கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது..

சென்னை மெட்ரோ ரயில்
இந்த இசை விருந்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களின் பயணத்தை எவ்வித தடையுமின்றி அமைக்கும் பொருட்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு சிறப்பான உடன்பாட்டை மேற்கொண்டுள்ளது.. இதற்காக தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான 'Torque Entertainment LLP' உடன் இணைந்து ரசிகர்களுக்கு இலவச பயண வசதியை வழங்க மெட்ரோ நிர்வாகம் முன்வந்துள்ளது..
இந்த அறிவிப்பின்படி, ஹிப் ஹாப் தமிழாவின் இசை நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக ரசிகர்கள் வாங்கியுள்ள நுழைவுச் சீட்டுகளே நாளை மெட்ரோ ரயில் பயணச் சீட்டாகவும் செயல்படும்.. அந்த நுழைவுச் சீட்டில் இடம்பெற்றுள்ள தனித்துவமான QR குறியீட்டைப் பயன்படுத்தி, ரசிகர்கள் நாளை ஒருமுறை சென்று வரக்கூடிய பயணத்தை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளலாம்..
நாளை இலவச பயணம்
அதாவது, சென்னையில் உள்ள எந்தவொரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் நந்தனம் மெட்ரோ நிலையத்திற்குச் செல்லவும், நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்கிருந்து மீண்டும் தங்களின் இருப்பிடத்திற்குத் திரும்பவும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.. பயணிகள் தங்களின் நுழைவுச் சீட்டில் உள்ள QR குறியீட்டை ரயில் நிலையங்களில் உள்ள ஆட்டோமெட்டிக் நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து தடையின்றி பயணிக்க முடியும்..
மேலும், நள்ளிரவு வரை நிகழ்ச்சி நடைபெறும் என்பதால் ரசிகர்கள் வீடு திரும்புவதில் சிரமம் இருக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில் சேவை நேரத்தையும் நிர்வாகம் நீட்டித்துள்ளது..
நந்தனம் மெட்ரோ ரயில்
வழக்கமான நேரத்தைத் தாண்டி, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் நோக்கியும், விம்கோ நகர் பணிமனை நோக்கியும் செல்லும் கடைசி ரயில்கள் நள்ளிரவு 12:00 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. அதேபோல், பச்சை வழித்தடத்தில் (Line 2) பயணிக்க வேண்டியவர்கள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது..
ரசிகர்கள் நெரிசலைத் தவிர்க்கவும், கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கவும் கடைசி ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நந்தனம் ரயில் நிலையத்திற்கு வருமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது..
பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், இசை ரசிகர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது....!!












Click it and Unblock the Notifications