1972 முதல் 2023-ம் ஆண்டு வரை.. அதிமுக தலைமையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன?
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியுள்ளார். அதிகமுகவில் சர்வ அதிகாரம் கொண்ட பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியில் இதுவரை இருந்த தலைவர்கள் யார் என்ற விவரங்களை பார்க்கலாம்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
இதில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அக்கட்சி தலைமை அறிவித்தது.

7-வது பொதுச்செயலாளராக
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அக்கட்சி தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிமுகவின் 7-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர், நாவலர் நெடுஞ்செழியன்
அதிமுகவில் சர்வ அதிகாரங்களை கொண்ட பொறுப்பு பொதுச்செயலாளர் பதவிதான். இந்த அதிகாரமிக்க பொறுப்பில் இதற்கு முன்பாக இருந்தவர்கள் யார் என்ற விவரங்களை பார்க்கலாம்.
* 1972 ஆம் ஆண்டு அதிமுக என்ற கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர் கட்சியின் முதல் பொதுச்செயலாளர் ஆனார்.
* 1978 ஆம் ஆண்டு நாவலர் நெடுஞ்செழியன் பொதுச்செயலாராக இருந்தார்.

ப உ சண்முகம், ராகவனாந்தம்
*1980 ஆம் ஆண்டு ப உ. சண்முகம் பொதுச்செயலாளராக பதவியேற்றார்.
*1984 ஆம் ஆண்டு ராகவனாந்தம் அதிமுக பொதுச்செயலாளராக இருந்துள்ளர்.
* 1989 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொதுச்செயலாளர் ஆனார்.
* தொடர்ந்து 28 ஆண்டுகள் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா 2016- ஆம் ஆண்டு மறைந்தார்.
* 2016- ஆம் ஆண்டு அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்
அதன்பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை அந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். அதன்பிறகு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது.

இன்று எடப்பாடி தேர்வு
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பு கொண்டு வரப்பட்டது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யட்டார். இதற்கு எதிராக சட்டப்போராட்டத்தை ஓபிஎஸ் தரப்பு முன்னெடுத்தது. இதில் ஓபிஎஸ்க்கு பின்னடைவு கிடைத்த நிலையில், அதிமுகவின் 7-வது பொதுச்செயலாளராக இன்று எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications