2 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 5 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணமா? இன்று முதல் புதிய விதி அமல்
சென்னை: ரூ. 5 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய விதியை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ 5 ஆயிரத்திற்கு மேல் உள்ள மின் கட்டணத்தை இனி ரொக்கமாக கவுன்ட்டர்களில் செலுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டணம், பால் கட்டணம், கேபிள், போன் கட்டணம் உள்ளிட்டவற்றை யூபிஐ மூலமும் இன்டர்நெட் பேங்கிங் மூலமும் செலுத்தி வருகிறார்கள். இதனால் டிஜிட்டல் இந்தியா என்பது பெரும்பாலான இடங்களில் சாத்தியமாகி வருகிறது. ஆரம்பத்தில் எல்லாவற்றுக்கும் பணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது பெட்டிக் கடைகளில் கூட யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது.

இன்றைய அவசர காலகட்டத்தில் மின்சாரம் என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. உணவு சமைப்பது முதல் அலுவலக பயன்பாடு வரை அனைத்துக்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. கோடையை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரு ஏசிக்கள் உள்ளன. அது போல் குளிர் பிரதேசங்களில் ஹீட்டர்களும் உள்ளன.
குளிப்பதற்கும் ஹீட்டர், அவிப்பதற்கு ஓவன், சமைப்பதற்கு இன்டக்ஷன் ஸ்டவ், சாதம் வடிக்க ஆட்டோமேட்டிக் ரைஸ் குக்கர், பாத்திரம் கழுவ டிஸ்வாஷ்ஷர், துணி துவைக்க வாஷிங் மெஷின், அதை அயர்ன் செய்ய அயர்ன் பாக்ஸ் என வந்துவிட்டது.
இதனால் பெரும்பாலானோர் வீடுகளில் ஆயிரக்கணக்கில்தான் மின் கட்டணம் கட்டுகிறார்கள். யூபிஐ வசதிகளையும் கம்ப்யூட்டரையும் பயன்படுத்தத் தெரியாத சிலர் மின்வாரிய அலுவலகத்திற்கே போய் மின் கட்டணத்தை செலுத்துகிறார்கள். இந்த நிலையில் ரூ 5000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால் மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள கவுன்ட்டரில் கட்ட முடியாத படி மின்சார வாரியம் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 3.32 கோடியாகும். தமிழகத்தில் வீடு, அலுவலகங்களுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சாரம் கணக்கெடுக்கப்படுகிறது. எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும். அதனை ரீடிங் எடுத்த 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படும். கடந்த ஆண்டு அபராதம் மட்டுமே ரூ.60,505 வசூலிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா, பணம் இல்லா பரிவர்த்தனை அடிப்படையில் மத்திய அரசின் உத்தரவுப்படி ரூ 20 ஆயிரத்திற்கு மேல் பரிவர்த்தனையை ரொக்கமாக பெறக் கூடாது என தெரிவித்துள்ளது. இதையேற்று தமிழகத்தில் மின்சார வாரியம் ரூ 20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப் பணத்தை ஆன்லைனில் செலுத்துமாறு தெரிவித்திருந்தது. பிறகு ரூ 10 ஆயிரமாக குறைக்கப்பட்டது. தற்போது ரூ 5 ஆயிரத்திற்கு மேல் இருந்தாலே ஆன்லைனில்தான் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் இனி ரூ 5000 த்திற்கு மேல் மின் கட்டணத்தை பணமாக கவுன்ட்டரில் செலுத்த முடியாது. இன்று முதல் இந்த விதி அமலுக்கு வருகிறது. ரூ 5 ஆயிரத்திற்கு மேல் உள்ள மின் கட்டணத்தை காசோலை, டிடி மூலம் மட்டுமே செலுத்த முடியும். அதே வேளையில் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை , கூடுதல் பணத்தையும் வங்கிகள் வசூலிக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications