திமுக சங்கியாகிவிட்டதா என்ன?.. வம்பிழுக்கும் காயத்ரி ரகுராம்.. பரபரப்பை கிளப்பிய திடீர் ட்வீட்!
சென்னை: மத்திய அரசின் திட்டங்களை தத்தெடுப்பதன் மூலம் திமுக பாஜகவாகிவிட்டதா என்று பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
சுகன்யா சம்ரித் திட்டம் எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும்.
இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் அவரது பெற்றோர் குறைந்தபட்ச தொகையான ரூ 1000 செலுத்தி அஞ்சலகங்களிலோ வங்கிகளிலோ கணக்கை தொடங்கலாம்.

திருமணம்
மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணம் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் ரூ 1000 முதல் ரூ 1.50 லட்சம் வரை வைப்புத் தொகையாக செலுத்தலாம். ஆண்டுக்கு 8.3 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு தொகையை 21 ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம். மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதம் பெற்று கொள்ளலாம்.

திட்டத்தின் மூலம் பயன்
இந்த திட்டத்தில் ஏராளமானோர் சேர்ந்து பயனடைந்துள்ளார்கள். மத்திய அரசு கொண்டு வந்த இந்த திட்டம் குறித்து தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தை
10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இக்கணக்கை தொடங்குவதற்கு குறைந்த பட்சமாக ரூ.250 செலுத்த வேண்டும். மேலும் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 250 அதிகபட்சமாக ரூபாய் 1,50,000 வைப்பு தொகை செலுத்தலாம்.

7.6 சதவீதம் வட்டி
சேமிக்கும் தொகைக்கு ஆண்டு ஒன்றிற்கு 7.6% வட்டி பெறலாம் . திட்டத்தின் மதிப்பு தொகையில் 50% வைப்புத் தொகையைத் பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காக பெற்றுக்கொள்ளலாம். முதிர்வு தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது 21 வயது நிறைவு பெற்றவுடன் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வு தொகைக்கு வரி விலக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயத்ரி ட்வீட்
இந்த செய்திக் குறிப்பு திமுகவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மத்திய அரசின் திட்டங்களை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்வதன் மூலம் திமுக பாஜகவாகிவிட்டதா என கேள்வி எழுப்பி வருகிறார். மேலும் திமுக சங்கியாகிவிட்டதாகவும் இன்னொரு ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு
இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் கூறுகையில் ஏன் எப்போதும் திமுகவை குற்றம்சாட்டி வருகிறீர்கள். மத்திய அரசின் திட்டங்களை தமிழில் வெளியிட அது தவறிவிட்டது, திமுக அதை செய்கிறது, இதில் என்ன தவறு என்கிறார்.

நன்மைகள்
பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள உறுப்பினர்கள் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பற்றி தெரியாது. எனவே அவர்கள் இந்த திட்டங்களை பரப்பவோ, மக்களுக்கு இந்த நன்மைகளை பெற உதவவோ முடியாது என்கிறார் இந்த வலைஞர்.












Click it and Unblock the Notifications