சிக்ஸர் அறிவிப்பு.. மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லையா? ஒரு நபர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இப்ப நிம்மதி
சென்னை: மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு, ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்திற்கு ஆண்டு வருமான வரன்முறை எதுவும் இல்லை. இதன்காரணமாக ஏராளமானோர் இந்த திட்டத்தில் பலன்பெற்று வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், ஒரு முக்கிய உத்தரவு வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து இந்த திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா
மேலும், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஏழை எளிய மக்களின் பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் தரமான மருத்துவ சேவை இலவசமாக கிடைத்திடும் வகையில் தமிழகத்தில் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா என்ற திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி பயனாளியின் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. காப்பீடு திட்டங்கள்: மேலும் சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு ரூபாய் 22 லட்சம் வரை காப்பீடு பெறும் வகையில் உள்ளது. இப்போது தமிழகத்தில் 855 அரசு மருத்துவமனைகள் மற்றும் 990 தனியார் மருத்துவமனைகளென ஆக மொத்தம் 1845 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வருமான சான்றிதழ் - ரேஷன் கார்டு
இந்த திட்டத்தில் இணைய வேண்டுமானால், ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையின் நகல், வருமான சான்றிதழ் (ஆண்டுக்கு ரூ.1.20 லட்சத்திற்குள்) போன்றவைகளுடன், கலெக்டர் அலுவலகத்தில் தந்து உறுப்பினர் சேர்க்கை மையத்தில், விண்ணப்பத்தை சமர்ப்பித்து, காப்பீடு அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அதன்படி ஏராளமானோர் இந்த திட்டத்தின்கீழ் நேரடியாக பலனை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், ஒரு நபர் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. அதன்படி, ஒரு நபர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு காப்பீடு அட்டை இல்லை என்பதற்காக தீவிர சிகிச்சை வழங்குவதில் காலதாமதம் செய்யக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதிரடி அறிவிப்பு - காலதாமதம் கூடாது
காரணம், ஒரு நபர் ரேஷன் அட்டைதாரர்கள் சிலர் காப்பீடு அட்டை வைத்துக் கொள்ளாமல் இருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஆதரவற்றவர்களாக இருக்கும் அவர்களுக்கு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும்போது காலதாமதம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாகவே, தமிழக அரசு இப்படியொரு அட்வைஸ் தந்துள்ளது.
ஒரு நபர் ரேஷன் கார்டுதாரர்களிடம் காப்பீட்டு அட்டை இல்லையென்றாலும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்யக்கூடாது என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருப்பது, பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications