நாமக்கல்லில் துள்ளிய கறிக்கடைக்காரர்! ஆட்டு சந்தைகளில் அமோகம்.. ரூ.5 கோடிக்கு அள்ளிய உளுந்தூர்பேட்டை
சென்னை: நாளை தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உற்சாகம் பீறிட்டு காணப்படுகிறது.. அதேபோல கால்நடை சந்தைகளிலும் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது.. இதனால் ஆடுகள் வாங்குவோர்களும் சந்தைகளில் குவிந்து வருகிறார்கள்.
தமிழகத்தின் கால்நடை சந்தைகள் எப்போதுமே பிரசித்தி பெற்றவையாகும்.. நிறைய கால்நடை சந்தைகள், வார வாரம் அல்லது மாத மாதம் நடப்பது வழக்கமான ஒன்று. இதுபோன்ற கால்நடை சந்தைகள்தான், கிராமப்புற விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

கால்நடை சந்தைகள்: அதனால், தமிழகத்தின் சந்தைகளுக்கு, வெளிமாநிலங்களிலும்கூட ஏராளமான கிராக்கி உண்டு.. அதிலும் பண்டிகை காலங்களில், கால்நடை சந்தைகளில் கூடுதல் விற்பனைகள் ஏற்பட்டு, கறிக்கடைக்காரர்களையே உற்சாகப்படுத்திவிடும்.
அந்தவகையில், தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படுகிறது.. தீபாவளி தினத்தன்று, அசைவ உணவுகள் சமைத்து சாப்பிடுவது வழக்கமாகும்.. அதனால், தமிழகத்தின் சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது... திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கேளூர் மாட்டு சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வியாபாரிகள் கேளுர் மாட்டு சந்தைக்கு வந்திருந்தனர்.
தனிப்பட்ட மாடுகள்: ஒரேநாள் விற்பனை ரூ.5 கோடியை தாண்டியது.. தனிப்பட்ட மாடுகள் 30 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விலை போனதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேபோல, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே, வீரகனூர் வாரச்சந்தையில் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனூர், தம்மம்பட்டி, சின்னசேலம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகளும் வியாபாரிகளும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட கூடுதலான ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் ரூ 2.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
எட்டயபுரம்: கோவில்பட்டி எட்டயபுரத்தில், 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வியாபாரிகள் வாங்கி சென்றார்கள். அந்தவகையில், 2.5 கோடி ரூபாய்க்கு விற்பனையானது..
நாமக்கல்லில் ஆட்டு சந்தையில் நாமக்கல் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதில், குறைந்தபட்சம் 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் வரை விலைபோன நிலையில், 1.50 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 3 மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. வழக்கத்தைவிட அதிக அளவு விற்பனையானதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முக்கியமாக கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள் வெள்ளாடுகளை வாங்குவதிலேயே விருப்பம் காட்டினார்.. இதில், ஆட்டின் உயரம், எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டது.
ஆடுகளை வாங்குவதற்காக பொதுமக்களும், கறிக்கடைக்காரர்களும் சந்தையில் குவிய துவங்கிவிட்டார்கள்.. செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் என 2 வகையான ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தாலும், இறைச்சிக்காக வெளியூருக்கு கொண்டு செல்லும் வியாபாரிகள் செம்மறியாடுகளை அதிகம் வாங்கி கொண்டு போனார்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் தீபாவளி முன்னிட்டு ஆடுகள் விற்பனை இன்று நடைபெற்றது. வியாபாரிகள் ஆடுகளை ரூ.6,000 முதல் ரூ.25,000 வரை விற்பனை செய்தனர். தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் ஆட்டுச் சந்தையில் கூட்டம் அலைமோதியது. கறி விற்பனைக்காக ஆடுகளைக் கொண்டு செல்வோர் மொத்தமாக 15 ஆடுகள் வரை விலைபேசி வாங்கி சென்றனர். இதனால் வியாபாரிகள் நல்ல லாபம் கண்டனர்.












Click it and Unblock the Notifications