முடிவுக்கு வருகிறது 18 வருட காத்திருப்பு.. சென்னை குரோம்பேட்டை மக்களுக்கு நல்ல செய்தி
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே சுரங்கப்பாதை ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது
சென்னை: சென்னை குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே சுரங்கப்பாதை ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சென்னையில் தியாகராய நகர் எப்படி மிக முக்கியமான வணிகப்பகுதியோ அதுபோல், குரோம்பேட்டையும் முக்கியமான வணிகப்பகுதியாக உள்ளது. அதற்கு காரணம் சென்னை தியாகராயர் மற்றும் குரோம்பேட்டையில் பேருந்து நிலையமும், ரயில் நிலையமும் ஒன்றாக இருப்பது தான்.
சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு இணைப்பு பகுதியாகவும் மையப்பகுதியாகவும் தியாகராய நகர் இருப்பதால், சென்னையின் முக்கிய வணிக பகுதியாக உள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கும் இடமாகவும், இசிஆர், ஓஎம்ஆர் சாலைகளை சில நிமிடங்களில் இணைக்கும் இடமாகவும் குரோம்பேட்டை இருப்பதால் குரோம்பேட்டை மிகப்பெரிய வணிக பகுதியாக மாறி உள்ளது.

மேம்பாலங்கள்
குரோம்பேட்டை மக்கள் ரயில் நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு வருவதற்கு அவர்கள் மேம்பாலங்களை மட்டுமே பயன்படுத்தியாக வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக ரயில் நிலையத்தை ஒட்டிய ராதாநகர் பகுதியில் உள்ளவர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மறு பகுதியை அடைய வேண்டும் என்றால், ரேடியல் ரோட்டை பிடித்து பாலத்தை சுற்றித்தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது.

ஜிஎஸ்டி சாலை
இந்நிலையில் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே ராதா நகர் ரயில்வே கேட் பகுதியில் கிழக்கு மற்றும் மேற்கு குரோம்பேட்டை பகுதிகளை இணைக்கும் வகையில் ராதா நகர் மெயின் ரோட்டில் இருந்து குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை வரை ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது. பல ஆண்டுகளாக இந்த பணி நடந்து வருகிறது.

முடிவுக்கு வருகிறது
2006-ம் ஆண்டு தொடங்கிய இந்த பணி பல்வேறு காரணங்களால் இன்னும் முடிக்கப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது நெடுஞ்சாலை துறையினர் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 18 வருட காத்திருப்புக்கு வரும் ஜூனில் விடை கிடைக்க போகிறது.

எஸ்கலேட்டர்
இந்த சுரங்கப்பாதை ஜி.எஸ்.டி. சாலைக்கு வரும் பகுதியில் உள்ள நகரும் படிக்கட்டுகளை(எஸ்கலேட்டர்) ரயில்வே பகுதிக்கு மாற்ற ரயில்வே துறை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அதற்கான பூர்வாங்க பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது அந்த பணிகள் முடிந்த பிறகு சுரங்கப்பாதை பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகிற ஜூன் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

அதிகாரிகள் தகவல்
இந்தநிலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை பல்லாவரம் எல்.எல்.ஏ. இ.கருணாநிதி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் கடந்த வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்கும்படி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார். வரும் ஜூன் மாதம் பணிகள் முடிந்து சுரங்கப்பாதை திறக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இதனிடையே சென்னை வேளச்சேரி பரங்கிமலை இடையேயான ரயில் பாதை பணியும் முடியும் தருவாயில் உள்ளது. வரும் ஜூன் மாதம் இந்த பாதையிலும் ரயில் சேவை துவக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications