ராம ராஜ்ஜியத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம்.. பல பாயிண்ட்ஸ் இருக்கு.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
ராம ராஜ்ஜியம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது
சென்னை: இந்திய அரசியலமைப்பின் கூறுகள் ராம ராஜ்ஜியத்தில் இருந்திருக்கின்றன என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இவரின் சமீபத்திய கருத்துக்கள் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில், இந்த கருத்தும் பேசுபொருளாகியுள்ளது.
ஸ்ரீ ரமண மகரிஷியின் 143வது ஜெயந்தி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆர்.என்.ரவி, 'ஸ்ரீரமண அநுபூதி' எனும் நூலை வெளியிட்டு உரையாற்றினார். அப்போதுதான் மேற்குறிப்பிட்ட கருத்தை கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "தேச பக்தியும், தெய்வபக்தியும் இணைந்து உருவானதுதான் இந்தியா. இந்த இரண்டையும் பிரிக்க முடியாது. மற்ற உலக நாடுகளை விடவும் இந்திய மக்கள் வித்தியாசமான பல பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர்.
இந்நாட்டை பல அரசர்கள் ஆண்டிருந்தாலும் எவராலும் இந்தியாவை ஒன்றிணைக்க முடியவில்லை. தொடக்கம் முதல் இசை, நடனம் மூலமாக இந்தியாவின் கலாச்சாரம் பிரதிபலித்து வருகிறது. இவ்வாறு இருக்கையில்தான் ஆங்கிலேயர் ஆட்சி காலம் தொடங்கியது. இந்த காலத்தில் கிறிஸ்தவமும் நாடு முழுவதும் வேகமாக பரவின. இந்நேரத்தில் நாட்டின் ஆன்மாவை காப்பாற்ற ரமண மகரிஷி போன்ற மகான்கள் தோன்றினர்.

இந்திய அரசியலமைப்பு சட்டம்
இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறும் அனைத்து அம்சங்களும் ராம ராஜ்ஜியத்தில் இருந்துள்ளன. அனைவருக்கும் அனைத்தும் என்பதே ராமராஜ்ஜியத்தின் சாரம். 1976ம் ஆண்டுதான் இந்தியாவில் மதச்சார்பின்மை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கருத்தியல் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டதுதான். இந்தியாவை பொறுத்த அளவில் மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சரி சமமாக மதிப்பது என்பதுதான். தமிழில் இதனை சரியாக கூற வேண்டும் என்றால் சமயசார்பின்மை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதைய இந்தியாவின் வளர்ச்சி என்பது தெய்வபக்தி மற்றும் தேச பக்தியை ஒன்றாக கொண்டதாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

திருக்குறள்
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றத்திலிருந்து கூறிவரும் கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. சனாதனம், ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு, தமிழ்நாடு-தமிழகம், கார்ல் மார்க்ஸ் சித்தாந்தம் என அவர் பேசிய விஷயங்கள் அனைத்தும் போராட்டங்களை தூண்டியுள்ளன. சனாதனம் குறித்து ஆளுநர் பேசியபோது, "ஆர்.என்.ரவி எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அவர் ஆளுநர் ரவியாக சனாதனம் கருத்துக்களை கூறமுடியாது" என்று திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன.

தமிழ்நாடு
அதேபோல, திருக்குறளை ஆங்கிலத்தில் ஜி.யு.போப் சரியாக மொழிப்பெயர்க்கவில்லை. இந்த மொழி பெயர்ப்பில் ஆன்மா இல்லை என்று ஆளுநர் ரவி கூறிய கருத்து தமிழறிஞர்களிடையே போராட்டத்தை தூண்டியது. இதெற்கெல்லாம் உச்சமாக அமைந்ததுதான் தமிழகம்-தமிழ்நாடு பிரச்னை. அதாவது தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமானது என்று அவர் கூறியபோது ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. தமிழ்நாட்டிற்கு ஆளுநரே அவசியமில்லை என்றும் கூறினார்.

கார்ல் மார்க்ஸ்
இதனையடுத்து ஒரு சில நாட்களுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸின் தத்துவம் இந்தியாவின் வளர்ச்சி பாதையில் தாக்கத்தை ஏற்படுத்தின என்று கூறியிருந்தார். இதற்கு எதிராக இடதுசாரிகள் போராட்டத்தில் குதித்தனர். தற்போது இதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு சட்டம் குறித்து கூறியுள்ளார். இந்த கருத்தும் அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications