வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை?
சென்னை: வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை மாநிலங்களுக்கு 70% ஆக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களுக்கு வணிக சிலிண்டர் ஒதுக்கீடு 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஜவுளி, எஃகு, ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சிலிண்டர் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி மறுத்துள்ளது. இதனால் வணிக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது.

ஈரான்- இஸ்ரேல் போரால் சென்னை உட்பட இந்தியா முழுவதும் வணிக சிலிண்டர் விநியோகம் சீரற்ற முறையில் இருப்பதால், வழக்கமாக வரும் சிலிண்டர்கள் வராமல் ஹோட்டல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர். அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே கையிருப்பில் சிலிண்டர் உள்ளது எனப் பல ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் எரிவாயு ஏற்றி வந்த கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்தது. இதனையடுத்து 4 கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தன. இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்திய போரால் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய வணிக சிலிண்டர்களின் அளவு 30 சதவீதம் ஆக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 23 முதல் 50 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை மாநிலங்களுக்கு 70% ஆக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு போரால் 30% ஆக குறைக்கப்பட்டு பின்னர் 50% ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 70% ஆக இயல்பு நிலைக்கு வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடு ஜவுளி, எஃகு, ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் பற்றாக்குறையால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது கூடுதல் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications