"இரு" பழம் நழுவி பாலில் விழுந்தது.. அதிமுக விவகாரத்தில் பாசிட்டிவ் சைன்! ஓபிஎஸ்ஸுக்கு டபுள் டமாகா!!
சென்னை: அதிமுகவுக்கு உரிமை கொண்டாடும் விவகாரத்தில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமைந்துள்ள இரு விஷயங்களால் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது.
அதிமுக யாருக்கு என்பது தொடர்பாக ஓபிஎஸ்ஸுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கிட்டதட்ட எடப்பாடி பழனிச்சாமியே வெற்றி பெற்றார். ஆனால் இது தட்டி பறிக்கப்பட்டு மோசடியாக பெற்ற வெற்றி என்பதுதான் ஓபிஎஸ் தரப்பின் வாதமாகும்.
இதனால் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தரப்பை நீக்குவது இவர் ஓபிஎஸ் தரப்பை நீக்குவதும் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெல்லி மேலிடத்தின் தலையீட்டை ஓபிஎஸ் நம்பியிருந்தார். ஆனால் கடைசி வரை டெல்லி மேலிடம் ஓபிஎஸ்ஸை சந்திக்கவும் இபிஎஸ்ஸை சந்திக்கவும் நேரம் ஒதுக்கவே இல்லை.

தோல்வி
இந்த நிலையில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த ஓபிஎஸ் தரப்புக்கு இருட்டான பாதையில் சிறிய ஒளி கிடைத்தது போல் இரு விஷயங்கள் கிடைத்துள்ளன. இதனால் ஓபிஎஸ் தரப்பு ஹேப்பியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

முதலாவது லட்டு
அதாவது முதலாவது லட்டு- கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என உத்தரவிடக் கோரி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கடந்த 29ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின் எழுத்துப்பூர்வ நகல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுக் குழு
அதில் அதிமுக பொதுக் குழு தொடர்பான அனைத்து மனுக்களையும் மீண்டும் விசாரித்து உயர்நீதிமன்றம் உத்தரவுகளை வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பொதுக் குழு நடைபெற வேண்டுமா வேண்டாமா என கடந்த 6 ஆம் தேதி உச்சநீதிமன்றம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தங்களது தீர்ப்பை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தவறாக புரிந்து கொண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம்
அதிமுக பொதுக் குழு தொடர்பான உச்சநீதிமன்றத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் அடுத்த இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுக் குழுவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் அதனை மீற முடியாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது லட்டு
தற்போது மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டதால் ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டாவது லட்டு என்னவென்றால் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பினரும், இபிஎஸ் தரப்பினரும் மாறி மாறி அணுகி இருவரும் பரஸ்பரம் நீக்கப்பட்டது குறித்து மனு அளித்திருந்தார்கள். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது.

வாக்காளர் அடையாள அட்டை
இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரையும் இணைக்க வேண்டும் என்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தின் கருத்துகளை கேட்க மாநில தேர்தல் ஆணையம் கட்சியினருக்கு அழைப்பு விடுத்தது. அப்போது இபிஎஸ் வசம் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. இது ஓபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

கோவை செல்வராஜ்
இந்த நிலையில் நேற்றைய தினம் கோவை செல்வராஜ் அளித்த பேட்டியின் மூலம் தேர்தல் ஆணையமும் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான பதிலை வழங்கியது தெரியவந்தது. அதாவது தேர்தல் ஆணைய பதிவுகளில் அதிமுக தலைமை குறித்து என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு
அதற்கு தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் தரப்புக்கு அளித்த பதிலில் கடந்த 1.12. 2021 அன்றைய நிலவரப்படி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்றும்தான் பதிவாகியுள்ளதாக ஆர்டிஐ சட்டம் மூலம் தெரியவந்துள்ளது என கோவை செல்வராஜ் தெரிவித்திருந்தார்.
Recommended Video

உள்கட்சி பிரச்சினை
அதிமுக உள்கட்சி பிரச்சினையில் ஓபிஎஸ் தரப்பு மிகவும் நம்பியது நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும்தான். முதலில் ஓபிஎஸ்ஸுக்கு இந்த நம்பிக்கைகளும் பொய்த்து போன நிலையில் தற்போது இவை இரண்டுமே அனுகூலமாகியுள்ளதால் அவர் தரப்பினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். இதனால் எப்படியாவது எடப்பாடி தரப்பினரிடம் இருந்து அதிமுகவை கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் தரப்பினர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழம் நழுவி பாலில் விழுந்தாலே மகிழ்ச்சிதான், அதிலும் ஓபிஎஸ்ஸுக்கு இரு பழங்கள் நழுவி பாலில் விழுந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சிதான்.












Click it and Unblock the Notifications