நயினார் நாகேந்திரன் வழக்கை விசாரிக்க ED மறுப்பு.. பரபர வாதம்.. விரிவான விளக்கம் கேட்ட ஐகோர்ட்!
சென்னை: திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை முக்கிய வாதம் வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 3 கோடியே 99 லட்சம் ரூபாயும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரின் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பண பறிமுதல் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ராகவன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் எனத் தெரிவித்திருந்தார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறையிடம் மனு அளித்ததாகவும், ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருதமுடியாது எனவும், இருப்பினும், இது சம்பந்தமாக அமலாக்கத் துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு வரும் ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விரிவான பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications