கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக்கூடாது.. இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டுமானங்களை அறநிலையத்துறை சட்டப்படி, பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் இருந்து வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் கட்ட தடை விதிக்கக் கோரி, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி. பழனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிதியை பயன்படுத்தி, வணிக வளாகங்கள் கட்ட கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பல கோயில்களில் வணிக வளாகங்கள் கட்டப்படுவதாகவும் மனுதாரர் ஏ.பி. பழனி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயில் வணிக வளாக கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்ட நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த கட்டடங்கள் மூலம் மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கந்தக்கோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டனர். அதே சமயம், அந்த கட்டுமானங்களை இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு நவம்பர் 22 ஆம் தேதிக்குள் பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டனர்.
மேலும், கோயில் நிதியில் இருந்து வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.












Click it and Unblock the Notifications