ராமர் கோயில் விழா.. தனியார் கோயில்களில் நேரலைக்கு அனுமதி தேவையில்லை! உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: உத்தரப் பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நேரலையை ஒளிபரப்ப காஞ்சி காமாட்சி கோயிலில் எல்இடி திரை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறையினர் இதனை அகற்றியுள்ளனர். இந்நிலையில் நேரடி ஒளிபரப்பு குறித்து உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது.
ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் இன்று குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இன்று பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ம் தேதி பல்வேறு மாநிலங்கள் பொது விடுமுறையை அறிவித்திருக்கின்றன. மட்டுமல்லாது கும்பாபிஷேக விழாவை நேரலையில் காண பாஜக ஆளும் மாநிலங்களில், பல்வேறு கோயில்களிலும் எல்இடி திரை வைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில், காஞ்சி காமாட்சியமன் கோயிலிலும் எல்இடி திரை வைக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து நேரலையை காணும் வகையில் திரை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அனுமதியின்றி திரை வைக்கப்பட்டதால் அதனை காவல்துறையினர் அகற்றினர். கோயிலில் பஜனை செய்வதற்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டதாகவும், அனுமதி கடிதத்தில் கோயிலில் நேரலை எதுவும் இருக்காது என உறுதி அளித்திருந்த நிலையில் வாக்குறுதியை மீறி அமைக்கப்பட்ட எல்இடி திரையை அகற்றியதாகவும் காவல்துறையினர் விளக்கமளித்திருக்கின்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிர்மலா சீதாராமன், "காஞ்சியில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் எல்.இ.டி. சப்ளையர்ஸ் அச்சத்தில் உள்ளனர். இந்து விரோத திமுக சிறு வணிகர்களை தாக்குகிறது. தமிழில் இதை "வயித்திலே அடிப்பது" என்பார்கள் என x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நேரலைக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தமிழ்நாட்டில் ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் நேரலையோ அல்லது பூஜையோ மேற்கொள்ள வேண்டுமென்றால் கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications