நெடுஞ்சாலைகளில் இனி நிம்மதியா போகலாம். போக்குவரத்து துறையின் மெகா உத்தரவு.. மகிழ்ச்சியில் பயணிகள்
சென்னை: நெடுஞ்சாலை ஓரங்களில் செயல்படும் ஓட்டல்கள் குறித்து, போக்குவரத்து துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.. இது பயணிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை தந்துவருகிறது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி என்று 8 கோட்டங்களாக செயல்பட்டு வருகின்றன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் நெடுந்தூர பஸ்களில் ஒன் டூ ஒன், எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், பாய்ண்ட் டூ பாயண்ட் போன்ற பெயர்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நெடுந்தூரம் செல்லும் பஸ்கள் உணவுக்காக சாலையோரமுள்ள ஓட்டல்களில் நிறுத்தப்படுகின்றன.
நெடுஞ்சாலை ஓட்டல்கள்: இந்த ஓட்டல்களில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சாப்பிட்டு செல்லக்கூடிய சூழலும் உள்ளது.. அதனால்தான், சாலையோர உணவு விடுதிகள் தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் தமிழ்நாடு அரசு சார்பில், தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.. குறிப்பாக, அதிக விலைக்கு உணவுப்பொருட்களை விற்கும் உணவு விடுதிகள் மீதும், சுகாதாரக் குறைவாக உள்ள கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அப்படி குறைகள் கண்டறியப்படும் ஓட்டல்கள் இருக்கும் இடத்தில் பஸ்களை நிறுத்தக்கூடாது என்றும், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்கனவே பலமுறை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தனி அறையில் வைத்து சிற்றுண்டி சாப்பாடு போன்றவை கொடுக்கக்கூடாது என்ற உத்தரவும் நடைமுறையில் உள்ளது.
சுகாதார சீர்கேடுகள்: இதையடுத்து, நெடுஞ்சாலைகளில் சுகாதார குறைவான செயல்படும் ஓட்டல்கள் அவ்வப்போது சீல் வைக்கப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நெடுஞ்சாலை ஓரங்களில் உணவுக்காக பஸ்கள் நிறுத்தும் ஓட்டல்களில் அதிக விலைக்கு விற்பனை செய்தால் புகார் தெரிவிக்கலாம் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
எனினும், நெடுஞ்சாலைகளில் பேருந்துகள் நிறுத்தப்படும் ஓட்டல்களில் மற்ற ஓட்டல்களை காட்டிலும் உணவுப்பொருட்களின் விலை அதிகமாகவும், உணவு தரமில்லாமலும் சுகாதாரமற்ற முறையிலும் இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தபடியே வந்தன.
கணினி ரசீதுகள்: அதுமட்டுமல்ல, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை, கழிவறைக்கு அதிகக்கட்டணம் வசூல் செய்வது, வாங்கும் பொருட்களுக்கு கணினி ரசீது கொடுப்பதில்லை, சம்பந்தப்பட்ட ஓட்டல்களில் டிரைவர், கண்டக்டர்களுக்கு தனி அறையில் உணவு அருந்த இடம் கொடுத்தல், சில ஓட்டல்களில் இலவசமாக உணவு வழங்குவதாகவும் புகார்கள் அதிகரித்து வருகின்றன.
சில டிரைவர், கண்டக்டர்கள் தரமில்லாத ஓட்டல்களில் பஸ்களை நிறுத்துவதாகவும் பயணிகள் தரப்பிலிருந்து போக்குவரத்து கழகத்திற்கு, நேரடியாகவே புகார்கள் சென்றுள்ளன.. அதனால்தான், இந்த உத்தரவை போக்குவரத்து கழகம் பிறப்பித்துள்ளது.
நிம்மதி அறிவிப்பு: அதன்படி, நெடுந்தூரம் செல்லும் பஸ்கள் ஒவ்வொரு வழித்தடத்தில் எந்தெந்த ஓட்டல்களில் நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பட்டியலில் உள்ள ஓட்டல்களில்தான் பஸ்கள் நிறுத்த வேண்டும், என்றும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறைகள், புகார்கள் இருந்தால் அதுகுறித்து தெரிவிக்க போக்குவரத்து கழகம் பயணிகள் உதவி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, "தமிழகம் முழுவதும் நெடுந்தூரம் செல்லும் பஸ்கள் எந்தெந்த ஓட்டல்களில் நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்து கழகம் பட்டியலை அறிவித்துள்ளது. அந்த ஓட்டல்களில்தான் பஸ்சை நிறுத்த வேண்டும் என்று டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை மீறி தங்களுக்கு சாதகமான ஓட்டல்களில் பஸ்களை நிறுத்தினால் புகார் தெரிவிக்கலாம்.
ரசீது: அறிவிக்கப்பட்ட ஓட்டல்களில் கழிவறைக்கு கட்டணம் வசூலிப்பது, நிர்ணயித்ததைவிட அதிக விலைக்கு விற்பனை செய்வது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்காதது, கணினி ரசீது கொடுக்கப்படாதது போன்ற குறைகள் இருந்தால், பயணிகள் அதைபற்றி புகார் தெரிவிக்கலாம். இதற்காக 1800 599 1500 என்ற நம்பரில் புகார்களை தரலாம்.
நிம்மதி: இந்த எண் பஸ்சின் உள்பகுதி, பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. புகார் சொல்லும் பஸ்சின் நெம்பர், எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்கு செல்கிறது? பஸ்சில் என்ன குறைபாடு? என்றெல்லாம் சொன்னால், அந்த புகார் சென்னையில் உள்ள தலைமை போக்குவரத்துக்கழக பணிமனைக்கு செல்லும். அந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தமான ஓட்டல்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனடியாக சென்று ஆய்வு செய்வார்கள். குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
