50,000 செலுத்தினால்,ரூ.25 லட்சம் கிடைக்கும்.. நிர்மலா சீதாராமன் தொடங்கிய என்பிஎஸ் வாத்சல்யா திட்டம்
சென்னை: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, குழந்தைகளின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க புதிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்படும் என்றார். இதன்படியே என்பிஎஸ் வாத்சல்யா ஓய்வூதிய திட்டத்தை காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்துள்ளார். என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் சிறப்புகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய தகவல்களை பார்ப்போம்.
செல்வ மகள் உள்பட குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏராளமான பயனுள்ள சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அடிக்கடி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில குழந்தைகளின் எதிர்காலத்திறகு சேமிப்பதற்காக புதிய திட்டத்தை இந்த முறை பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது பேசிய அவர், "குழந்தைகளின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க 'புதிய ஓய்வூதிய திட்டம்' தொடங்கப்படும் என்று கூறியிருந்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தபடியே புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்தபடி, என்.பி.எஸ். வாத்சல்யா ஓய்வூதிய திட்டத்தை காணொலி காட்சி மூலம் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, நெல்லை உள்பட நாடு முழுவதும் 75 இடங்களில் இந்த நிகழ்ச்சி ஒரே நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து புதிதாக கணக்கு தொடங்கிய சிறுவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், " அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் ஓய்வூதிய பலன்கள் அளிக்கும் வகையில் என்.பி.எஸ். வாத்சல்யா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டம் குழந்தைகளின் பொருளாதார சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். குறைந்தது ஆண்டுக்கு ரூ.1000 செலுத்தி திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தின்படி சேமிப்புத் தொகைக்கு உச்சவரம்பு என்று ஏதுமில்லை.
இந்த என்.பி.எஸ். வாத்சல்யா திட்டத்தில், பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரையிலான அனைவரும் சேரலாம். அவர்களுக்கான சந்தா தொகையை பெற்றோர் அல்லது பாதுகாவலர் செலுத்தலாம். இந்தத் திட்டக் கணக்குகளை வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் உள்ளிட்ட அமைப்புகள் மூலமும், இ-என்.பி.எஸ். (e-NPS) என்ற இணையதளம் மூலமாகவும் தொடங்கலாம்.
இந்த என்.பி.எஸ். வாத்சல்யா திட்டத்தில் சேருவதற்கான தேவையான ஆவணங்கள் என்ன: பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றை இருப்பிடத்திற்கான ஆதாரமாக காண்பிக்கலாம். மேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருமானவரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) அல்லது படிவம் 60-ன் படி உறுதிமொழி அளித்தும் கணக்கு தொடங்க முடியும்.
என்.பி.எஸ். வாத்சல்யா திட்டத்தில் சேருவதற்கு குழந்தைகளுக்கு தேவையான ஆவணம்: இதில் கணக்குத் தொடங்கப்படும் குழந்தையின் வயது சான்றாக, பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் போன்றவற்றையும் அடையாளமாக காட்டலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலர் வெளிநாடுவாழ் இந்தியராக இருந்தால் அதற்கான வங்கி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களை ஊக்குவிக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.
குழந்தை பிறக்கும் போது அதனுடைய பெயரில் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் செலுத்தினால் அந்த குழந்தைக்கு 18 வயதாகும் போது ரூ.25 லட்சம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை தனது பருவ வயதை எட்டி, தாமாக வருவாய் ஈட்டி, சந்தா தொகையை செலுத்தினால், அவருடைய ஓய்வு வயதின்போது (60 வயது) ரூ.12.5 கோடி வரை கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
குழந்தையின் மேற்படிப்பு, குறிப்பிட்ட வகை உடல்நலக் குறைபாடு, உடல் ஊனத்திற்கான சிகிச்சை போன்ற தேவைகளுக்காக, முதலீடு தொடங்கியதிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த பங்களிப்பில் 25 சதவீதத்தை 3 முறை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 18 வயது நிரம்பும்போது, இத்திட்டத்திலிருந்து வெளியேறிக் கொள்ளவோ அல்லது தொடர்ந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கோ அனுமதி அளிக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications