லீவ் நாளில் கோர்ட்டில் ஆஜர் பண்ணீங்களா? முரணா இருக்கே! பல்லாவரம் MLA மகன் மருமகளுக்கு ஐகோர்ட் ஜாமீன்
சென்னை: வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகளுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சிறுமி ஒருவர் வீட்டு வேலை பார்த்து வந்தார். அவரை துன்புறுத்தியதாக எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினாவுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில் ஜனவரி 25ஆம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜாமின் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா தரப்பில், பெற்றோர் இல்லாமல் தங்களுடைய 4 வயது குழந்தை பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், இருவருக்கும் ஜாமின் வழங்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், அவர்களை ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறி பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், காவல்துறை தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக 16 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும், இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, காவல்துறை விசாரணையில் பல முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளது. மேலும், விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். அதனால், காவல் துணை கண்காணிப்பாளர் அல்லது உதவி ஆணையர் தகுதியில் உள்ளவர்களே வழக்கை விசாரிப்பது சரியாக இருக்கும் என்பதால், காவல்துறை இயக்குநர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 4 வயதில் குழந்தை இருப்பதைக் கருத்தில் கொண்டு, நிபந்தனை ஜாமீன் அளிக்கப்படுகிறது எனக் கூறி இரண்டு வாரங்களுக்கு நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications