இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது 3 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு.. சிறையில் அடைக்க முடிவு?
சென்னை: சென்னை அண்ணா சாலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கனடாவில் உள்ள இந்து கோயில்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று காலை காவல்துறையின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று நினைத்து 100க்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

இதனால் அண்ணா சாலையில் இன்று காலை பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 11 பேர் மட்டுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அந்த 11 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். அர்ஜுன் சம்பத்தின் கார் ஓட்டுநரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதானதால், அவரது கார் கேட்பாரின்றி சாலையில் நின்றது.
அந்த காரை போலீசார் அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்தனர். இதனிடையே சென்னை அண்ணா சாலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் சிறையில் அடைக்கப்படுவாரா விடுவிக்கப்படுவாரா என்பதை போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை..
பொதுவாக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்வது வழக்கம் . சில நேரங்களில் போலீசாரின் அனுமதியின்றி திட்டமிட்டு போராட்டம் நடத்தினால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அவர்கள் காலையில் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்படுவார். மாலையில் விடுவிக்கப்படுவார்கள். இதுவும் வழக்கமான நடைமுறை தான்.
அதேநேரம் மிக முக்கியமான சென்செட்டிவ்வான பகுதிகளில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் போராட்டம் நடத்தினால், அவர்களை கைது செய்வதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவும் செய்வார்கள். உதாரணமாக முதல்வர் அலுவலகம் முன்பு, முதல்வர் இல்லம் முன்பு, தலைமை செயலகம் முன்பு , சென்னை அண்ணா சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகளில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் போராட்டம் செய்தால் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவும் செய்வார்கள். எனவே அர்ஜூன் சம்பத் சிறையில் அடைக்கப்படுவாரா அல்லது விடுவிக்கப்படுவாரா என்பதை போலீஸ் தெரிவித்தால் தான் இறுதியான நிலவரம் தெரியவரும்.












Click it and Unblock the Notifications