ஒரே நாளில் இரண்டு முக்கியமான விஷயம்.. சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் சொன்ன பாய்ண்ட்
சென்னை: வரி பிடித்தம் செய்பவர்களுக்கு உதவுவதற்காக https://youtube.com/@incometax tamilnaduandpuduc9090 என்ற யூடிப் இணைப்பில் 16 தலைப்புகளில் வருமான வரித்துறை தமிழ்மொழியிலேயே 'வீடியோ' வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையின் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல முதன்மை தலைமை கமிஷனர் ரவிச்சந்திரன் ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் ( 2022-23-ம் நிதியாண்டில் ) வருமான வரியாக ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 364 கோடி வசூலானது. இந்த தொகை என்பது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாகும். வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டிய வரித்தொகை (ரீபண்ட்) 16 ஆயிரத்து 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வரி பிடித்தம் மூலம் மட்டும் 59 ஆயிரத்து 887 கோடியே 60 லட்சம் ரூபாய் வரி வசூலாகி உள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட 24.85 சதவீதம் அதிகமாகும்.
இந்த மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் வரி ஏய்ப்பு சம்பந்தமாக இதுவரை 92 ஆய்வு மேற்கொண்டோம். இதில்159 கோடியே 52 லட்சம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.78.51 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. பல தனியார் நிறுவனங்கள், ஊராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வரியை வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை. இதன் காரணமாக வட்டி மற்றும் அபராதத்துடன் பிடித்தம் செய்யப்பட்ட வரி தமிழகத்தில் வசூலிக்கப்பட்டு வருகிறது.
வருமான வரி செலுத்தாதவர்கள், பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியை வருமான வரித்துறைக்கு செலுத்தாத நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளிடம் வட்டி மற்றும் அபராதத்துடன் வரியை வசூலித்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 7 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் சிறை தண்டனைக்கு உள்ளாகி உள்ளார்கள்.
இந்த ஆண்டும் ஒரு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. வருமான வரி செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். 22 ஆயிரம் அரசுத்துறைகள் வருமான வரி பிடித்தம் செய்து வருமான வரித்துறைக்கு செலுத்தி வருகின்றன. இதில், வரி பிடித்தம் செய்து அதை செலுத்தாதவர்களுக்கு உரிய பயிற்சியை அளித்து வருகிறோம்
வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகிறோம். வணிக நிறுவனங்கள் மேற்கொள்ளும் குறிப்பிட்ட தொகைக்கு மேலான பண பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு உடனே வந்துவிடும். அதன்பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து வருமான வரியை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி வருகிறோம்.

வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தும் பான் கார்டு இணைப்பு மூலமாக வருமான வரித்துறைக்கு தெரிந்துவிடும். பான்கார்டு-ஆதார் இணைப்பை பெரும்பாலானோர் மேற்கொண்டுள்ளனர். வருமான வரித்துறை அலுவலகங்களில் பல்வேறு அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோர், வரி பிடித்தம் செய்வோர் வசதிக்காக 'ஆஸ்க்' என்ற சேவைப்பிரிவை பல்வேறு அலுவலகங்களில் தொடங்கி உள்ளோம். காரைக்குடியில் உள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த வருமான வரி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு நாட்டிலேயே முதன்முறையாக வரி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் வரி கணக்குகள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் இடம் பெற்றுள்ளன" இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு வீடியோ : வரி பிடித்தம் செய்பவர்களுக்கு உதவுவதற்காக https://youtube.com/@incometax tamilnaduandpuduc9090 என்ற யூடிப் இணைப்பில் 16 தலைப்புகளில் வருமான வரித்துறை தமிழ்மொழியிலேயே 'வீடியோ' வெளியிட்டிருக்கிறது. இதன்மூலம் வரி பிடித்தம் செய்பவர்கள் அதுதொடர்பான பணிகளை சுலபமாக மேற்கொள்ளமுடியும்.












Click it and Unblock the Notifications