"எம்ஜிஆர்".. சட்டென காரை விட்ட எடப்பாடி.. வழியில் பார்த்தால் பெண்கள்! இனி எல்லாம் "சுப்ரீம்" தானாமே!
சேலம்: அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் வென்ற பின் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் முறையாக சேலம் செல்கிறார். அவரை வரவேற்க பெரிய அளவில் நிர்வாகிகள் கூட்டம் திரண்டு உள்ளது.
தொட்டதெல்லாம் வெற்றி.. செல்லும் இடமெல்லாம் மாலை.. கைக்கு வந்த பெரும் சக்தி என்று உற்சாகத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக உட்கட்சி மோதலில் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து வென்று வருகிறார். ஏற்கனவே பொதுக்குழுவை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.
அதன்பின் இரட்டை இலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வென்றார்.

பொதுக்குழு
அதன்பின் பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கிலும் வென்றார். இரண்டு நாட்களுக்கு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

தீர்ப்பு என்ன?
ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதோடு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் அந்த தீர்மானங்களை நிராகரிக்க முடியாது. அதோடு பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும். அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிமுக தேர்தல் குழு நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வெற்றி
இப்படி வெற்றி மேல் வெற்றி பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்திற்கு செல்கிறார். நெடுஞ்சாலையில் இருக்கும் தனது வீட்டிற்கு அவர் செல்கிறார். முதல்முறையாக பொதுச்செயலாளர் ஆன பின் செல்லும் இவர் தனது குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் வருகையை முன்னிட்டு, சேலத்தில் அவரை வரவேற்க பெரிய அளவில் நிர்வாகிகள் கூட்டம் திரண்டு உள்ளது. முக்கியமாக அதிமுக தொண்டர்கள் பலரும்.. கட்சியின் அடுத்த எம்ஜிஆரே.. நிரந்தர பொதுச்செயலாளரே.. கட்சியின் தலைமையே என்றெல்லாம் பேனர் வைத்து எடப்பாடியை வரவேற்க காத்து உள்ளனர்.

பெண்கள்
முக்கியமாக அதிமுக கூட்டங்களில் சமீப காலமாக காட்சி அளிக்காத பெண்கள் கூட்டம் இன்று அதிக அளவில் காணப்பட்டது. எடப்பாடியை வரவேற்க சாரை சாரையாக பெண்கள் கூட்டம் சாலையில் நின்று கொண்டு இருந்தது. அதிமுகவின் சுப்ரீம் லீடர் இவர்தான்.. இனி அவர் சொல்வதே வேத வாக்கு. கட்சியில் இனி இரண்டு அணிகள் எல்லாம் இல்லை. ஒரே அணிதான். அது எடப்பாடி பழனிசாமி அணிதான் என்று அங்கே இருக்கும் அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
