தமிழர் பிரதமரானால் மகிழ்ச்சி..மோடி மீது என்ன கோபம்..அமித்ஷாவின் உள்நோக்கம் புரியவில்லை .. முதல்வர்
சென்னை: தமிழர் ஒருவர் இந்தியாவின் பிரதமரானால் மகிழ்ச்சிதான் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மோடி மீது அமித் ஷாவிற்கு என்ன கோபம் என்று தெரியவில்லை என்று தெரிவித்த முதல்வர், அமித் ஷாவின் உள்நோக்கம் புரியவில்லை என்றும் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்,
தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறவிட்டுள்ளது தமிழகம்; அதற்குக் காரணம் திமுகதான் என்று கூறினார். வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், தமிழர் பிரதமராவதை திமுக தடுத்ததாக வெளிப்படையாக சொன்னால் விளக்கம் தரப்படும் என்றும் கூறினார்.

தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்று அமித் ஷா கூறியது மகிழ்ச்சிதான். எல்.முருகன் மத்திய அமைச்சராக இருக்கிறார் அவரை பிரதமராக்கலாம் என்று தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அமித் ஷாவின் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், மோடி மீது அமித் ஷாவிற்கு என்ன கோபம் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த திட்டங்கள் என்னவென்று நான் கேட்ட கேள்விக்கு அமித் ஷா பதில் சொல்லவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications