அப்பா இருந்திருக்க வேண்டும்.. துணையாக நிற்கும் ஷாலினிக்கு நன்றி.. "பத்மபூஷண்" அஜித் குமார் அறிக்கை!
சென்னை: பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும் என்று நடிகர் அஜித் குமார் கூறியுள்ளார். இதனை பார்த்து நிச்சயம் தந்தை பெருமை கொள்வார் என்று கூறியுள்ள அஜித், 25 ஆண்டுகளாக உற்ற துணையாக இருக்கும் மனைவி ஷாலினி மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது நடிகர் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் அளித்து வரும் பங்களிப்பு காரணமாக இந்த விருதினை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனால் அஜித் குமார் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நடிகர் அஜித் குமார், குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்ம பூஷண் விருதை பெறுவது பெருமை அளிக்கிறது. இந்த கவுரவத்திற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தேசத்திற்கான என் பணியை அங்கீகரிக்கப்படுவதை பாக்கியமாக நினைக்கிறேன்.
இதற்காக என்றும் நம் நாட்டிற்கு நன்றியுடன் இருப்பேன். அதே சமயம், இது எனக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல. என்னை ஆதரித்த அனைவருக்குமான வெற்றியாக கருதுவேன். சினிமாவில் உள்ள மூத்தவர்கள், பல்வேறு துறை நண்பர்கள், பெயர் சொல்லப்படாத பலருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனது சினிமா பயணத்தில் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு, ஆதரவு ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.
இந்த நேரத்தில் என் அப்பா இருந்திருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இருப்பினும் அவர் நிச்சயம் பெருமையாக உணர்வார். என் மீது அளவு கடந்த அன்பை பொழிந்து, எண்ணற்ற தியாகங்களை செய்த என் அம்மாவுக்கு நன்றி. அதேபோல் 25 ஆண்டுகளாக எனக்கு உற்ற துணையாக இருக்கும் என் மனைவி ஷாலினிக்கும் நன்றி. மகள் அனோஷ்கா, மகள் ஆத்விக், ரசிகர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருக்கும் நன்றி.
உங்கள் அன்பும், ஆதரவும் எப்போது எனது பயணத்திற்கான ஆர்வத்தையும், அர்ப்பணிப்பை வழங்க தூண்டுதலாக இருந்துள்ளது. அதனால் இந்த விருது எனக்கு மட்டுமல்லாமல், உங்களுக்கானதாகவும் இருக்கும். தொடர்ந்து உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்ற உறுதியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications