தமிழகத்தில் இருந்து பிரதமரா? அப்போ இவர் தான் சரியாக இருப்பார்! அமித்ஷாவுக்கு திமுக பரிந்துரை! யாரு?
சென்னை: தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் பேசியதோடு, 2 பிரதமர் வாய்ப்பை திமுகவால் தமிழகம் இழந்துவிட்டது என சாடியிருந்தார். இந்நிலையில் தான் திமுக உடனடியாக பதிலடி கொடுத்துள்ளதோடு, முக்கிய நபரின் பெயரை பிரதமராக்க பரிந்துரைத்து இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
மத்தியில் கடந்த 2014 முதல் பாஜக ஆட்சி நடந்த வருகிறது. அன்று மதல் 9 ஆண்டுகளாக பிரதமராக நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். அடுத்த ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் மத்தியில் 9 ஆண்டு ஆட்சி நிறைவடைந்ததுள்ள நிலையில் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து செல்லும் வகையில் ஜூன் 30ம் தேதி வரை சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இன்று மத்திய பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூரில் நடைபெறுகிறது. வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 2 நாள் பயணமாக அமித்ஷா நேற்று தமிழ்நாடு வந்தார். சென்னை இரவு சென்னை வந்த அமித்ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பிறகு அமித்ஷா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் எம்பி பாரிவேந்தர், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசிசண்முகம், வேல்ஸ் யூனிவர்சிட்டியின் வேந்தர் ஐசரி கணேஷ் இயக்குனர் ஆர்கே செல்வமணி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தொழிலதிபர்கள் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், செட்டிநாடு சிமெண்ட்ஸ் முத்தையா, முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன், முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன் உள்பட 24 பேரை சந்தித்து பேசினார்.

இதையடுத்து இன்று சென்னை கோவிலாம்பாக்கம் தனியார் மண்டபத்தில் அமித் ஷா தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். மத்திய இணை அமைச்சர் முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், ‛‛தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே எனது விருப்பமாகும். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்குவோம். தமிழகத்தில் இருந்து இரண்டு பிரதமர்களை தவறவிட்டுள்ளோம். தமிழகத்தை சேர்ந்த காமராஜர், மூப்பனார் பிரதமர் ஆவதை தவறவிட்டுள்ளோம். இவ்வாறு இருமுறை பிரதமர்களை தவற விட திமுக தான் காரணம்'' என்றார்.
இந்நிலையில் தான் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் அளித்த பேட்டியில், ‛‛பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் இல கணேசன். தற்போது நாகாலாந்து ஆளுநராக பதவி வகிக்கிறார். அவரை பிரதமர் ஆக்குங்கள் அதோடு இன்னும் ஒரு ஆண்டு தேர்தலுக்கு இருக்கிறது. இதனால் தற்போதுகூட இல கணேசனை மாநிலங்களவை உறுப்பினராக்கி பிரதமராக்கலாம். அவர்களை யார் தடுத்தது?'' என பரிந்துரைத்து கேள்வி எழுப்பினார். மேலும் ‛‛ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்றெல்லாம் பேசியவர் அமித்ஷா. இப்போது தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக தான் இப்படி பேசுகிறார்" என டிகேஎஸ் இளங்கோவன் கடுகடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications