"இரட்டை இலை"யில் இல்லை! தனி சின்னத்தில்தான் போட்டி! 7 தொகுதிகளை கேட்ட ஐஜேகே! பாரிவேந்தர் சொன்ன தகவல்
சென்னை: அதிமுக கூட்டணியில் தனிச் சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் என அதன் தலைவர் பாரிவேந்தர் (எ) பச்சமுத்து தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குகிறது. தமிழகத்தில் கோடை வெயில், திருவிழாக்கள், புத்தாண்டு, சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுக்கின்றன.

இந்த நிலையில் அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், இன்றைய தினம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
அப்போது அவரிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தி விட்டு வந்த பாரிவேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுக கூட்டணியில் தனிச் சின்னத்தில்தான் ஐஜேகே போட்டியிடும். எங்களுக்கு செல்வாக்குள்ள 7 தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தோம்.
அவர் என்டிஏ கூட்டணியில் பேசிவிட்டு சொல்வதாக கூறியுள்ளார் என பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயக கட்சி என்று அழைக்கப்படும் ஐஜேகே கட்சி கடந்த 2010-ஆம் ஆண்டு டி.ஆர். பாரிவேந்தர் என்பவரால் நிறுவப்பட்டது. பாரிவேந்தர் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் நிறுவனராகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இந்த கட்சி முதலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 2011 முதல் 2019 வரை இணைந்து செயல்பட்டது.
பின்னர் 2019 முதல் 2021 வரை திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்தது. 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்தது.
2024 முதல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து 2025 முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியிலும் பங்கேற்றுள்ளது.
இந்த கட்சியின் தேர்தல் வரலாற்றைப் பார்க்கும்போது 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் போட்டியிட்டது.
2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் அதே கூட்டணியில் பங்கேற்றது. ஆனால் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணியில் இணைந்து பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிட்டு 4 லட்சத்து 3 ஆயிரத்து 518 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
அந்தத் தேர்தலில் கட்சி சில இடங்களில் போட்டியிட்டாலும் பாரிவேந்தரின் வெற்றி முக்கியமானதாக இருந்தது. 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் 38 இடங்களில் போட்டியிட்டு சராசரியாக 0.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றது ஆனால் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. மேலும் பல இடங்களில் வைப்புத்தொகையை (டெபாசிட்) இழந்தது.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் போட்டியிட்டாலும் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. 2025 முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணியில் இணைந்துள்ளதால் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அந்தக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. கட்சியின் வாக்கு வங்கி சதவீதம் பொதுவாக 1 சதவீதத்துக்கும் கீழேயே இருந்தாலும் கூட்டணிகளில் சிறிய பங்களிப்பை அளித்து வருகிறது. சமீப காலங்களில் கட்சியின் சில உறுப்பினர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications