எகிறிய தங்கம் விலை.. அட்சய திரிதியையொட்டி இன்று 3வது முறையாக விலையேற்றம்.. மக்கள் ஷாக்
சென்னை: அட்சய திருதியை நாளான இன்று பொதுமக்கள் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நகைக்கடைகளில் தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் இன்று ஒரே நாளில் 3வது முறையாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்க செல்வோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நம் நாட்டில் தங்கத்தின் மீதான ஈர்ப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. நம் நாட்டை பொறுத்தவரை தினமும் தங்கம், வெள்ளியின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் விலை என்பது நாள்தோறும் மாறிமாறி வருகிறது.

இந்நிலையில் தான் இன்று அட்ஷய திருதியை நாளாகும். இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது செல்வத்தை பெருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
அதற்கு இன்றைய தினமும் விதிவிலக்கல்ல. இன்று காலை முதலே நகைக்கடைகளில் கூட்டம் அலைமோத தொடங்கியது. இந்நிலையில் தான் நேற்றைய தினம் ஒரு சவரன் தங்கம் 52,920 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் அட்சய திரிதியை நாளான இன்று காலை முதலே தங்கத்தின் விலை ஏற்றம் காண தொடங்கியது.
பொதுவாக தங்கத்தின் விலை என்பது காலை 10 முதல் 11 மணிக்கு தான் மாற்றம் செய்யப்படும். ஆனால் இன்று காலையில் கூட்டம் அதிகரித்த நிலையில் தங்கத்தின் விலை மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை காலை 6.15 மணிக்கு ரூ.45ம், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்தது. இதனால் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.53,280 ஆக விற்பனையானது. ஒரு கிராம் ஆபரண தங்கம், ரூ.6,660க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன்பிறகு அடுத்த சில மணிநேரங்களில் மீண்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 உயர்த்தப்பட்டது. இதனால் சில மணி நேரங்களிலேயே தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம் கண்டது. காலையில் சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், மீண்டும் ரூ.360அதிகரித்து. இதனால் ஒரு சவரன் ரூ.53,640க்கு விற்பனையானது.
அதன்பிறகு இன்று மாலையில் மீண்டும் தங்கத்தின் விலை 3வது முறையாக அதிகரித்தது. இன்று பிற்பகல் 3 மணியளவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.65ம், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520ம் அதிகரித்தது. இந்த 3வது முறை விலையேற்றத்தில் தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.54,160க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு முதலில் 360, 2வது 360, 3வது 520 என மொத்தம் 3 முறைகளில் ரூ.1,240 வரை விலை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications