சூப்பர்.. 1 லட்சம் அடிக்கு மேலே.. மூவர்ணக் கொடியை விண்வெளியில் பறக்கவிட்ட 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'!
சென்னை: இந்திய சுதந்திர தினத்தையொட்டி 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு நமது தேசியக் கொடியை பூமிக்கு அப்பால் சுமார் 1 லட்சம் அடிக்கு மேலே பறக்க விட்டுள்ளது.
இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் தேசியக் கொடி ஏற்றி மாணவர்களின் அணிவகுப்புகள் நடைபெற்றன. அந்தந்த மாநில முதல்வர்கள் தலைமைச் செயலகங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தனர். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையை ஆற்றினார்.

இந்நிலையில், பூமியில் மட்டுமல்லாமல் விண்வெளியிலும் நமது இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆம், 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு சார்பில் ராட்சத பலூனில் நமது தேசியக் கொடி வைத்து அனுப்பப்பட்டது. அந்தக் கொடி பூமியில் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரம் அடி மேலே சென்ற போது பலூன் மூலமாக தேசியக் கொடி அவிழ்த்துவிடப்பட்டு பறக்கவிடப்பட்டது. மூவர்ணக் கொடி விண்வெளியில் பட்டொளி வீசி பறக்கும் காட்சியை 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' தனது யூடியூப் சேனலிலும் வெளியிட்டுள்ளது.
இதற்காக அந்த அமைப்புக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதனிடையே, இந்திய சுதந்திர தினத்துக்கு விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி பணிபுரிந்து கொண்டிருக்கும் இத்தாலி நாட்டின் விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோஃபொரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "76-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியாவுக்கு எனது வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.
அதேபோல, நாசாவில் பணிபுரியும் இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா சாரியும் இந்திய சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்பது இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் அமைப்பு ஆகும். பள்ளி மாணவர்களிடத்தில் விஞ்ஞானம் குறித்த புரிதலை ஏற்படுத்தி விண்வெளி சம்பந்தமான விழிப்புணர்வை இந்த அமைப்பு ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் 750 அரசுப் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஆஸாதிசாட் எனற எடைக்குறைந்த செயற்கைக்கோளை எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலமாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா விண்வெளிக்கு அனுப்பியது. ஆனால், அந்த ராக்கெட் சரியான வட்டப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தாமல் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications