கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு குட்நியூஸ்.. நீண்ட நாள் பிரச்சனையில் சாதகமான உத்தரவு.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடம் வாடகை பாக்கியை வசூலிக்க தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அரசு, கேபிள் டிவி ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டு வந்த பின், கடந்த 2014ம் ஆண்டு நாடு முழுவதும் கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. தமிழகத்தில் 2017ம் ஆண்டு முதல் டிஜிட்டல் முறை நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், 2017ம் ஆண்டுக்கு முன் தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை எனக் கூறி, அதை வசூலிக்கும் நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன், உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை எதிர்த்தும், வசூல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரியும் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பிலும், சில உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எந்த நோட்டீசும் அளிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு தகராறு தீர்ப்பாயத்தில் தான் இந்த பிரச்னையை எழுப்ப முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடம் இருந்து பாக்கி தொகையை வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
தமிழ்நாடு கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழகத்தில் அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷனுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படவில்லை. நவீன தொழில் நுட்பமும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 25 லட்சம் இணைப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு சென்றுவிட்டது. தற்போது 15 லட்சம் இணைப்புகள் தான் உள்ளது.எனவே தமிழக அரசு விரிவான விசாரணை நடத்தி அரசு கேபிளுக்கு தேவையான உயர்தொழில்நுட்ப வசதி, போதிய நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்தாண்டு மத்திய அரசின் இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் (டிராய்) கட்டண உயர்வு செய்ய அனுமதி வழங்கியது. அதை பயன்படுத்தி கட்டண சேனல்களும் எம்.எஸ்.ஓ., நிறுவனங்களும் ஒன்றுசேர்ந்து கட்டணத்தை உயர்த்தி கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் வசூலிக்கின்றன. இதனால் கட்டணக் கொள்ளையால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications