அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகிறாரா? தலைவர் பதவியில் இருந்து நீக்கமா? சீக்ரெட்டை சொன்ன புள்ளி
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையை ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக நியமித்து அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளதாகவும், தமிழ்நாடு பாஜக தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வர தொடங்கி உள்ளன.
பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் இந்த நடைபயணம் தொடங்கப்பட உள்ளது.

ஜனவரி 11ம் தேதி சென்னையில் இந்த பயணம் நிறைவடைய உள்ளது. மொத்தம் 168 நாட்கள் இந்த பயணம் நடைபெறும். இதற்காக பாஜக சார்பாக பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 2024 தேர்தலை மனதில் வைத்து இந்த நடைப்பயணத்தை பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் 4 நாட்கள் இந்த நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன்படி அண்ணாமலை ஜனவரி 7, 8, 9 மற்றும் 11 ஆகிய 4 நாட்களில் சென்னையில் நடைபயணம் மேற்கொள்வார்.
இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலையை ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக நியமித்து அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு பாஜகவில் பதவி கொடுக்க வாய்ப்பு உள்ளது. தமிழிசை சௌந்தரராஜன், எல் முருகன் ஆகியோருக்கு இப்படி பதவி கொடுத்தனர். அண்ணாமலைக்கு இப்படி பதவி கொடுக்கலாம் என்று கூறுகிறார்கள்.
ஆனால் அவர்கள் போல இல்லாமல் அண்ணாமலை கொஞ்சம் சிறப்பாக செயல்படுகிறார். அவர் பாஜகவை பற்றி வெளியே செய்திகளை வர வைக்கிறார். ஹெட்லைனில் இருக்கிறார். அவர் சொல்லும் சில விஷயங்கள் சர்ச்சைக்குரிய விஷயங்களாக இருக்கலாம். ஆனாலும் பாஜகவை லைம்லைட்டில் வைத்துள்ளார்.
அவர் மீது பலவிதமான புகார்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க வேண்டும். கூட்டணி கூட வேண்டாம் என்று சொல்கிறார். தனக்கு கீழ் பாஜக வளர வேண்டும் என்று அண்ணாமலை நினைக்கிறார். பாஜகவை அண்ணாமலை வளர்த்து உள்ளாரா என்று தெரியவில்லை. அட்லீஸ்ட் மீடியாவில் பாஜகவை கொண்டு வந்துள்ளார்.
அது தேர்தலில் எந்த அளவிற்கு பலன் கொடுக்கும் என்று தெரியவில்லை. அவருக்கு எம்பி பதவி கொடுக்கலாம். ஆனால் அமைச்சர் பதவி என்பது சந்தேகம்தான். 2024 தேர்தல் வரை அவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவி கொடுக்கலாம். அவருக்கு அமைச்சர் பதவி கிடைப்பது கஷ்டம்.
2024 தேர்தலுக்கு பின் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து தமிழ்நாட்டில் பாஜக தலைவர் மாற்றப்படலாம். ஆனால் இப்போது வாய்ப்பு இல்லை. அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக வரும் செய்திகளை யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. அண்ணாமலையே கூட இந்த செய்திகளை பரப்பலாம்.
எல் முருகன் இன்னும் கேபினெட் அமைச்சர் ஆகாமல் இணை அமைச்சராக உள்ளார். அப்படி இருக்க அண்ணாமலை அமைச்சராக்கப்படுவாரா என்று தெரியவில்லை. ஆனால் பாஜக திடீரென முடிவுகளை எடுக்கும் கட்சி என்பதால் பாஜக எப்போது என்ன முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications