ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி பழனிசாமி.. ஒரே நாளில் 2 பேருக்கும் 2 மெசேஜ்கள்.. அடுத்து என்ன?
எடப்பாடி ஓபிஎஸ் இடையே பனிப்போர் வெடித்துள்ளதற்கு என்ன காரணம்
சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை கண்டித்து, தமிழகமெங்கும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். அந்த ஆர்ப்பாட்டம் 2 விதமான தாக்கத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தி உள்ளது.
தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை 3 வழக்குகளில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் சாலை மறியலில் ஈடுபட்டதற்கான வழக்கில் மட்டும் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது... மற்றவைகளிலும் ஜாமீன் பெறும் முயற்சியும் நடந்து வருகிறது.

ஜனநாயகம்
ஒரு ஜனநாயக சமூகத்தில் கருத்துக்களை சொல்வதற்கு தடையோ, சுதந்திர உணர்வுகளுக்கு அழிவு தரும் நடைமுறைகளோ கண்டிப்பாக இருக்க கூடாது என்ற அண்ணாவின் கொள்கைகளுக்கு நேர்மாறாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்த திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது..

ஆர்ப்பாட்டங்கள்
அதன்படியே ஆர்ப்பாட்டங்கள் இன்று நடந்தன. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 38 மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் திரண்டனர்.. போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம் என அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தது..

எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.. மதுரை சிம்மக்கல்லில் செல்லூர் ராஜு தலைமையிலும், விழுப்புரத்தில் சிவி சண்முகம் தலைமையிலும் அதிமுக தொண்டர்கள் பெருந்திரளாக திரண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மெசேஜ்கள்
இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் 2 வகையான மெசேஜ்கள் வெளிப்பட்டுள்ளன.. ஒன்று, விரைவில் சட்டமன்றத்துக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் பேசும்போது, "கண்ணை மூடி கண்ணை திறந்தால், 3 வருடங்கள் ஓடிவிடும்.. அடுத்து நாம தான் என்பதில் உறுதியாக இருங்கள்.. மூன்றாண்டுகளில் திமுக ஆட்சி வீழ்த்தப்பட்டு மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்..

எடப்பாடி பழனிசாமி
இத்தனை நாளும் எடப்பாடி பழனிசாமி மட்டுமே முன்னிறுத்திய இந்த கோஷத்தை அடுத்தடுத்த மாஜிக்களும் கையில் எடுத்துள்ளது திமுகவுக்கு வைக்கும் செக்காகவே பார்க்கப்படுகிறது... குறிப்பாக தேர்தல் தோல்வியை அடுத்து, திமுக மீதான குற்றம் குறைகளையும் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி கொண்டு தேடி பார்க்க ஆரம்பித்துள்ளது அதிமுக தரப்பு.. அடுத்ததாக, ஒற்றை தலைமை விவகாரம் கட்சிக்குள் வெடித்து வரும் நிலையில், ஓபிஸ் இல்லாமலேயே இன்றைய ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.. குறிப்பாக மாஜிக்களில் பெரும்பாலும் எடப்பாடி ஆதரவாளர்களாகவே இன்று களமிறங்கி உள்ளனர்..

பதிலடி
தன்னுடைய பலத்தை எடப்பாடி இன்றைய தினம் மீண்டும் நிரூபிக்க முயல்வதாக இது பார்க்கப்படுகிறது.. இதற்கு பதிலடி தரும் வகையில் ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? அவரும் தென்மாவட்டங்களில் தன் பலத்தை நிரூபிக்க வேறு ஏதாவது வழிகளை கையில் எடுப்பாரா? எடப்பாடிக்கு எதிராக எந்த மாதிரியான அஸ்திரத்தை கையில் எடுக்க போகிறார்? அல்லது வழக்கம்போல் இணக்கமாகவே சென்றுவிடுவாரா? என்ற பல சந்தேகங்களையும் இன்றைய ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தி உள்ளது. ஆக மொத்தம் ஒருபக்கம் ஓபிஎஸ், மறுபக்கம் திமுக என இரு தரப்பையும் திணற வைத்துள்ளது இந்த ஆர்ப்பாட்டம்.












Click it and Unblock the Notifications