அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கைதானவர் திமுகவை சேர்ந்தவரா? அமைச்சர் விளக்கம்.. அண்ணாமலை மீது அட்டாக்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகர் என்பவர் திமுகவை சேர்ந்தவர் என்பது உண்மை கிடையாது என்றும், எது நடந்தாலும் திமுகவை குறை சொல்வது என்பது அண்ணாமலையின் பிறவி குணம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த தள்ளுவண்டியில் பிரியானி கடை நடத்தி வரும் ஞானசேகர் (வயது 37) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர் என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். மேலும் அமைச்சர் பொன்முடி, உதயநிதி ஸ்டாலினுடம் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார். 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பதில் அளித்துள்ளார்.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர் என்பது உண்மை கிடையாது என்றும், எது நடந்தாலும் திமுகவை குறை சொல்வது என்பது அண்ணாமலையின் பிறவி குணம் என்று அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.
கோவி செழியன் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மாணவி புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி பாலியல் வழக்கில் கைதானவர் திமுக பிரமுகர் என்று சொல்வது பொய். தவறான தகவலை பரப்புகிறார்கள். அண்ணாமலையின் பிறவி குணமே எது நடந்தாலும் திமுகவை குறை சொல்வது தான். அதன் அடிப்படையில் தான் அண்ணாமலை அப்படி பேசுகிறார்.
இது உண்மை கிடையாது. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர் என்பது உண்மை கிடையாது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, பாதிப்பு தான். இப்படி நடக்கக் கூடாது. பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் செய்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் கோவி செழியன் கூறினார்.
முன்னதாக அண்ணாமலை ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- ”அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது.
ஒரு குற்றவாளி, திமுகவில் உறுப்பினராவதோடு, அந்தப் பகுதி திமுக நிர்வாகிகளுடன் நெருக்கமாகிறார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன. மேலும், அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், பகுதி காவல் நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார்.
அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக, அவர் மீதான வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் இருப்பதால், மேலும் குற்றங்களைச் செய்ய அது அவருக்கு இடமளிக்கிறது. தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசே பொறுப்பு. எவ்வளவு காலம் தமிழக மக்கள் இந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியினர் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா? இப்போதாவது பொதுமக்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா?” என்று பதிவிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications