ஜல்ஜீவன்.. 7 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளில் ரெடியாகும் மாஸ் திட்டம்.. தமிழகத்தில் தீரப்போகும் தாகம்
சென்னை: தமிழகத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், குடிநீர் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, 1.03 கோடி மக்களுக்கு, தினசரி 68.27 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும்.
ஜல் ஜீவன் மிஷன் என்னும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டப்படி 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட வீட்டு குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்க வேண்டும் என்று இலகு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15, 2019 அன்று இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் உள்ள 19.27 கோடி குடும்பங்களில் 3.23 கோடி (17%) குடும்பங்கள் மட்டுமே குழாய் நீர் இணைப்புகளைக் கொண்டிருக்கின்றன. அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கான மாபெரும் பணியை நிறைவேற்ற, 3.60 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2022-23 -ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் 3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் நீர் வழங்கும் வகையில் இத்திட்டத்திற்கு ரூ 60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2025-26 -ம் ஆண்டு வரை ரூ.1,42,084 கோடி நிதிஉதவி வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் மூலம் நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில், பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்தி கிராமப்புறப் பொருளாதாரம் மேம்படும். அத்துடன் கிராமங்களில் வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அறிவித்தபடிநிதி ஒதுக்கியதால், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பல்வேறு குடிநீர் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்திலும் முழுவீச்சில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, வீடுகள்தோறும் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன, அந்த வகையில், 7 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 11,866 ஊரக குடியிருப்புகளில் உள்ள 1.03 கோடி மக்களுக்கு, தினசரி 68.27 கோடி லிட்டர் குடிநீர் விரைவில் கிடைக்க போகிறது.
தமிழகத்தில் மட்டும் மொத்தம் 40 குடிநீர் திட்ட பணிகள், 14,784 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. இதில், மத்திய அரசின் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ், 14,668.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021ம் ஆண்டில் இருந்து இதுவரை, 2 மாநகராட்சிகள், 11 நகராட்சிகள், 38 பேரூராட்சிகள் மற்றும் 5,044 ஊரக குடியிருப்புகளில் உள்ள, 59.91 லட்சம் மக்களுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் முடிந்துள்ளது.இதன் மூலம் 35 கோடி லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், குடிநீர் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள, 544 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதால் , 12 மாநகராட்சிகள், 65 நகராட்சிகள், 346 பேரூராட்சிகள் மற்றும் 52,361 ஊரக குடியிருப்புகளில் உள்ள, 4.53 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைத்து வருகிறது. இந்த திட்டத்தில் 7 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 11,866 ஊரக குடியிருப்புகளில் உள்ள 1.03 கோடி மக்களுக்கு, தினசரி 68.27 கோடி லிட்டர் குடிநீர் விரைவில் கிடைக்க போகிறது.












Click it and Unblock the Notifications