ஜியோ ஐபிஓ: ரிலையன்ஸ் பங்குதாரர்களுக்கு இப்படியொரு பிரச்சனை இருக்கா..? நிபுணர்கள் சொல்வது என்ன?
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாகவும், அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கப்படும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடுவதற்கான பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. இந்த ஐபிஓ மூலம் ரிலையன்ஸ் குழுமம் சுமார் ரூ.35,000 முதல் ரூ.40,000 கோடி வரை நிதி திரட்ட உள்ளது.
இந்த ஐபிஓ மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மதிப்பை மேலும் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் பெரிய அளவில் உருவாகியுள்ளது. ஆனால், உண்மையில் ஜியோ ஐபிஓ வந்தவுடன் ரிலையன்ஸ் பங்கு விலை அதிரடியாக உயருமா? என்ற கேள்விக்கு சந்தை நிபுணர்கள் சற்று எச்சரிக்கையான பதிலையே வழங்குகின்றனர். என்ன காரணம்?

ஜியோவுக்கு அதிக மதிப்பு.. ஆனா ரிலையன்ஸுக்கு
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தனி நிறுவனமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டால், அதன் மதிப்பு தற்போதைய கணிப்புகளை விட அதிகமாக இருக்கலாம். இருப்பினும், அந்த முழு மதிப்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையில் பிரதிபலிக்காது என தரகு நிறுவனங்கள் கருதுகின்றன.
இதற்கு முக்கிய காரணம் "ஹோல்டிங் கம்பெனி டிஸ்கவுண்ட்" எனப்படும் சந்தை நடைமுறையாகும்.
ஹோல்டிங் கம்பெனி டிஸ்கவுண்ட் என்றால் என்ன?
ஒரு பெரிய நிறுவனத்தின் கீழ் பல துணை நிறுவனங்கள் இயங்கும்போது, அந்த துணை நிறுவனங்களின் தனிப்பட்ட மதிப்பை விட தாய் நிறுவனத்திற்கு சந்தை குறைவான மதிப்பையே வழங்கும்.
அதாவது, ஜியோ தனியாக அதிக மதிப்பைப் பெற்றாலும், அது முழுமையாக ரிலையன்ஸ் பங்கு விலையில் பிரதிபலிக்காது. இதனால் பல தரகு நிறுவனங்கள் ரிலையன்ஸின் டிஜிட்டல் மற்றும் ரீடைல் பிரிவுகளுக்கு சுமார் 20 சதவீத ஹோல்டிங் கம்பெனி டிஸ்கவுண்டை கணக்கில் எடுத்தே மதிப்பீடு செய்து வருகின்றன என Nuvama Institutional Equities தெரிவித்துள்ளது.
ஜியோ முழுவதும் ரிலையன்ஸின் சொத்து இல்லை
மேலும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழு உடைமையாக இல்லை என்பதும் மற்றொரு முக்கிய காரணமாகும். மெட்டா, கூகுள், சில்வர் லேக், கேகேஆர் மற்றும் பல சர்வதேச முதலீட்டு நிதி நிறுவனங்கள் ஜியோவில் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்துள்ளன.
இதனால், ஜியோவின் சந்தை மதிப்பு உயர்ந்தாலும் அதன் பலன் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து பங்குதாரர்களுக்கும் பகிரப்படும்.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஜியோ பங்குச் சந்தைக்கு வருவது ரிலையன்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் வணிகத்திற்கு மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் உண்மையான சந்தை மதிப்பு வெளிப்படையாக தெரியும் வாய்ப்பு உருவாகும்.
ஆனால், ஜியோ ஐபிஓ = ரிலையன்ஸ் பங்கிற்கு உடனடி ஜாக்பாட் என்ற எதிர்பார்ப்பில் முதலீடு செய்வதை விட, ஹோல்டிங் கம்பெனி அமைப்பு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு மற்றும் மதிப்பீட்டு தள்ளுபடி போன்ற காரணிகளையும் கவனத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என சந்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஜியோ ஐபிஓ ரிலையன்ஸ் குழுமத்திற்கு நீண்டகால மதிப்பு உருவாக்கும் முக்கிய நிகழ்வாக இருந்தாலும், அதன் முழு பலன் உடனடியாக ரிலையன்ஸ் பங்கு விலையில் பிரதிபலிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. குறுகிய கால உற்சாகத்தை விட, நீண்டகால மதிப்பு உருவாக்கும் வாய்ப்பாகவே இந்த ஐபிஓவை சந்தை தற்போது பார்க்கத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications