மகளிர் உரிமைத்தொகை: தமிழக அரசு கொடுத்த "இரண்டு லட்டு" விண்ணப்பிக்க மிஸ் பண்ணியிருந்தாலும் சான்ஸ்!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஒரு கோடி பேருக்கு தான் என்ற எந்தவித இலக்கும் கிடையாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், மாதம்தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. திமுக தேர்தல் அறிக்கையிலே மிகவும் கவனம் பெற்ற அறிவிப்பாக இந்த ஆயிரம் ரூபாய் அறிவிப்பு இருந்தது.ஆனால் திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்ததால், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து ஆளும் திமுக அரசை விமர்சித்தன.

இதேபோல் மக்களும் இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி, விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபற்றது. இந்த விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், விடுபட்ட நபர்களுக்காக சிறப்பு முகாமும் மூன்று நாட்கள் நடைபெற்றது. மொத்தத்தில் தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவதற்காக 1 கோடியே 83 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.
இவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்தப் பணிகள் நிறைவு அடைந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியான பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 83 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ள நிலையில், சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். திட்டம் தொடங்கி வைப்பதற்கு முந்தைய நாளே, மகளிரின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. இதனால், பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 18 ஆம் தேதிமுதல், விண்னப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டதற்கான காரணத்துடன் மெசேஜ் அனுப்பப்பட்டது. மேலும் தகுந்த காரணம் இன்றி விண்ணப்பம் நிராகரிக்கபப்ட்டு இருந்தால் இ சேவை மூலமாக கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்யாலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன்படி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் தற்போது மேல் முறையீடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஒரு கோடி பேருக்கு தான் என்ற எந்தவித இலக்கும் கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். மகளிர் உரிமைத்தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் தகுதி இருந்தால் தற்போது விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள் தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம். ஒரு கோடி பேருக்கு தான் உரிமைத்தொகை என்ற எவ்வித இலக்குகளும் இல்லை. தகுதி இருக்கின்றவர்கள் வரும் அக்டோபர் மாதம் 18-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்தில் மனு அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் உரிமைத்தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மேல் முறையீடு செய்ய வழங்கப்பட்டு இருக்கும் அதே கால அவகாசத்தில் புதிதாக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் இவ்வளவுதான் பயனாளிகள் என்ற இலக்கு எதுவும் கிடையாது. இ சேவை மூலமாக விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
