கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி.. அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்யணும்.. அண்ணாமலை போர்க்கொடி
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியான நிலையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் அருகே கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தம் 55 பேர் வரை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் சுரேஷ், பிரவீன், சேகர் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். அதன்பிறகு சிகிச்சையில் இருந்த மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை என்பது 5 ஆக அதிகரித்துள்ளது. மற்றவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் 5 பேரின் சாவுக்கு கள்ளச்சாராயம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை அந்த மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் ஷ்ரவன் குமார், ‛‛உயிரிழந்த அவர்கள் 5 பேருக்கும் வெவ்வேறு உடல்நல பாதிப்பு இருந்துள்ளதாகவும் அதனால்தான் அவர்கள் உயிரிழந்தனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உடற்கூறாய்வுக்கு பிறகு தான் முழு விபரம் என்பது தெரியவரும் என கூறியுள்ளார். இதற்கிடையே தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து தான் 5 பேர் பலியானதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி ஆளும் கட்சியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று மாலையில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியின் பொறுப்பு என்பது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதாகும். அதோடு அதற்கான போலீஸ் பிரிவை அவர் ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கள்ளச்சாராய புழக்கம் உள்ளது. இதனால் அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். காரணம் அவரது பணியை அவர் செய்யவில்லை. மேலும் இந்த கள்ளச்சாராய புழக்கத்துக்கு முதலமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த கதை தொடரக்கூடாது.
இது ஒருபுறம் இருக்க மணல் கடத்தும் கும்பல் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தாசில்தார் தேவநாயகி மற்றும் அசிஸ்டென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் விஏஓக்கள் துப்பாக்கியை பெற லைசென்ஸ்க்கு விண்ணப்பிக்கும் சூழல் உள்ளது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இது சாட்சியாகும்'' என்று விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications