வெடித்த கள்ளச்சாராய விவகாரம்.. பாஜக, பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.. சபையை களேபரமாக்கிய அதிமுக
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான விவகாரம் இன்று தமிழக சட்டசபையில் எதிரொலித்தது. விவாதிக்க கூறி அதிமுகவினர் அமளி செய்ததால் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்ட நிலையில் பாஜக, பாமக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இன்று 2வது நாளாக சட்டசபை தொடங்கியது. அப்போது அதிமுக, பாமக எம்எல்ஏக்கள் கருப்பு நிற உடையணிந்து வந்திருந்தனர். அதாவது கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் 50 பேர் பலியாகி உள்ளனர். அதோடு இன்னும் ஏராளமானவர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அதுமட்டுமின்றி சட்டசபை தொடங்கியதும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
அப்போது, ‛‛காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை கேள்வி நேரம். கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்படும்'' என்று கசபாநாயகர் அப்பாவு கூறினார். ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் கேட்கவில்லை. சில அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி சபாநாயகர் இருக்கை முன்பு கோஷமிட்டனர்.
சபாநாயகர் அப்பாவு அவர்களை சமாதானம் செய்து இருக்கையில் அமர கூறினார். ஆனால் அவர்கள் கேட்காமல் கோஷமிட்டனர். இதனால் தமிழக சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு சபை நடவடிக்கை முடங்கியது. இதையடுத்து சபையின் மையப்பகுதிகளை வெளியேற்றும்படி காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டார். மேலும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கு சபையில் இருந்த எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி உள்பட பிற எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சட்டசபை நடவடிக்கையை கண்டித்து அவர்களும் வெளியேறினர். சட்டசபையில் கள்ளச்சாராய பிரச்சனை பற்றி விவாதிக்க அனுமதி வழங்கவில்லை எனக்கூறி எடப்பாடி பழனிச்சாமி உள்பட பிற அதிமுக எம்எல்ஏக்கள் சபையில் இருந்து வெளியேறினர்.
அதிமுகவை தொடர்ந்து பாஜக, பாமக எம்எல்ஏக்களும் சட்டசபையை விட்டு வெளியேறினர். அதன்படி பாஜக எம்எல்ஏக்களான வானதி சீனிவாசன், எம்ஆர் காந்தி ஆகியோர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சட்டசபையில் இருந்து வெளியே வந்தனர். பாமக எம்எல்ஏக்களான அருள் உள்ளிட்டர்வர்கள் ஜிகேமணி தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications