"மன்னராட்சி".. ஸ்டிரைட்டா ஸ்டாலினுக்கே கோரிக்கை விடுத்த கமல்.. திடீர் வேண்டுகோள்.. பரபர அறிக்கை
ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் ஒரு கோரிக்கை விடுத்து ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: "எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் விருதுபெற விண்ணப்பிக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும்" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவியலாளர்களை போற்றும் வகையில் விருதுகள், பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது.. இந்த விருதை பெறுவதற்கு அரசு குறிப்பிடும் நேரத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் பதிவு செய்ய வேண்டும் என்பது பொதுவான விதி..!
ஆனால், சமீபகாலமாகவே விருதுகள் வரவர கேலிக்கூத்தாகி வருகிறது.. விருது பெற்றவர்களுக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லாத சூழலே உள்ளது.. இதனால் அந்த விருதுக்கே மரியாதையும் குறைந்துவிடும் அபாயமும் உள்ளது.. இதற்கெல்லாம் காரணம் என்ன? எதன் அடிப்படையில் அரசின் விருதுகள் வழங்கப்படுகின்றன?

தகுதி
பொதுவாக ஒருவரின் திறமை, ஆக்கப்பூர்வமான பணி, செயல்பாடு, தாக்கம், போன்றவைகளை மதிப்பிட்டு விருது வழங்கி கவுரவிப்பதே அடிப்படையானதாக இருக்க முடியும்... இதற்கான முயற்சியை அரசே முயன்று, தகுதியானவர்களை கண்டறிந்து, அவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து, கவுரவம் தந்து விருது தருவதே சாலச்சிறந்ததாகவும் இருக்க முடியும். ஆனால், இங்கு நிலைமை அப்படி இல்லை..

ஆதாரங்கள்
நல்லாசிரியரோ, கலைமாமணியோ, யாராக இருந்தாலும், தாங்களே தங்கள் தகுதிகளை விலாவரியாக எடுத்து சொல்லி, தாங்கள் தகுதியானவர்கள்தான் என்பதற்கான ஆதாரங்களையும், சான்றுகளையும் இணைத்து, விருதுக்கு விண்ணப்பிக்கும் அவலம் நீடிக்கிறது.. ஆனாலும் இறுதியில் சிபாரிசே எடுபட்டு விடுகிறது... தகுதியானவர்களுக்கு மட்டும்தான் விருது தரப்படுகிறது என்பதையும் ஏற்பதற்கில்லை..

விருதுகள்
ஏனெனில் தமிழே தெரியாத தமன்னாவுக்கும், ஸ்ரேயாவுக்கும் தமிழ்நாடு அரசு "கலைமாமணி' விருதை தந்ததை எந்த வரிசையில் சேர்ப்பது? என்ற சந்தேகமும் நமக்கு உள்ளது. அதேசமயம், இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது.. எனக்கு விருது கொடுங்கள் என்று எத்தனை பேர் வாய்விட்டு அரசிடம் கேட்பார்கள்? குறிப்பாக சுயமரியாதையை பெரிதென நினைப்பவர்கள் விருதுக்கு தங்களை தாங்களே முன்னிறுத்தி கொள்ள வாய்ப்பே இல்லை.

பத்மஸ்ரீ
தேசிய அளவில் வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதுகளிலும் ஏகப்பட்ட மன வருத்தங்களும், அதிருப்திகளும் உள்ளன.. பத்மஸ்ரீ என்றாலே அது மதிப்புக்குரிய ஒன்றாகவும், மாண்புக்குரிய ஒன்றாகவும் கருதப்பட்டு வந்தது.. ஆனால் குற்றப்பட்டியலில் பெயர் இடம்பெற்ற ஒருவருக்கு "பத்மஸ்ரீ' விருது தந்ததுமே அத்தகைய கணிப்பு நொறுங்கிவிட்டது.. சிபாரிசுகள் டெல்லி வரை பறக்கின்றன.. இதனால் தகுதியானவர்களை இழக்கும் சூழலும் ஒவ்வொரு துறையிலும் ஏற்படுவது, ஏற்க முடியாத உண்மையாகும். இப்படிப்பட்ட சூழலில்தான், கமல் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட் முக்கியத்துவத்தை பெறுகிறது.

அறிக்கை
இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்: "எழுத்தாளர்களை, அறிஞர்களை, கலைஞர்களை விருதுகள் வழங்கிப் போற்றுவது ஓர் ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம். பண்பாட்டிற்குப் பங்களித்த ஆளுமைகளை கவுரவிக்க எண்ணற்ற விருதுகள் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனும் அறிவிப்பும் அவ்வப்போது வெளியாகின்றன. விண்ணப்பித்துப் பெறுவதன் பெயர் விருதல்ல. அதன் பெயர் பரிசு. விருதென்பது தகுதியான ஆளுமையைத் தேடி வரவேண்டிய ஒன்று.

நூல்கள்
கூருணர்வுள்ள எந்தக் கலைஞனும் அமைப்பிற்கு வெளியேதான் தன்னை நிறுத்திக்கொள்வான். எங்கும் தன்னை முன்னிறுத்திக்கொள்ள மாட்டான். சிபாரிசுக் கடிதங்களுக்கு அலைவதோ, தன்னுடைய நூல்களைத் தானே வாங்கி அனுப்பி வைப்பதோ, சான்றிதழ்களை இணைப்பதோ அவனைப் பொறுத்தவரை கவுரவமான ஒன்றல்ல. அந்த நிமிர்வே ஒரு கலைஞனின் முதன்மையான அடையாளம். விண்ணப்பித்துப் பெறக்கூடிய எந்த விருதும் தன் ஆளுமைக்கு இழுக்கு என்றே எந்த அசலான கலைஞனும் நினைப்பான்.

கலைஞன்
வயிற்றுப் பாட்டுக்குக் கடன் கேட்கவே நல்ல கலைஞன் யோசிப்பான். கடன் கேட்டு அவமானப்படுவதற்குப் பதிலாகப் பட்டினியே கிடக்கலாம் என நினைப்பான். எனக்குத் தெரிந்த, எனக்குக் கற்பித்த எந்தக் கலைஞனும் விருதுக்கு அலைந்ததில்லை. ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்து விண்ணப்பித்து, போட்டி போட்டு உறிப்பானை அடிப்பது போல விருதுக்கு விண்ணப்பம் கேட்டால், அசலான கலைஞர்கள் மவுனமாக நகர்ந்துவிடுவார்கள்.

நடுவர் குழு
ஒவ்வொரு விருதுக்கும் தகுதியானவர்களைக் கொண்டு நடுவர் குழு அமைக்கப்பட வேண்டும். விருதிற்குரிய நபர்களைத் தேடிக் கண்டடைவது இந்தக் குழுவின் பொறுப்பு. நடுவர் குழு உறுப்பினர்களின் விவரங்கள் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும். இன்னின்ன தகுதிகளின் அடிப்படையில் இவ்விருதுக்கு இன்னார் தேர்வு செய்யப்பட்டார் என்பதை நடுவர் குழு அறிவிக்க வேண்டும்.

நோக்கம்
முடிந்தவரை விருதுகளை அக்கலைஞன் வாழும் ஊரில் சென்று விழா எடுத்து வழங்கவேண்டும். அவன் வாழும் சூழலில் அவனுக்குரிய கவனத்தையும் அங்கீகாரத்தையும் ஏற்பையும் உருவாக்கியளிப்பதே விருதுகளின் நோக்கமாக இருக்கவேண்டும். பல நல்ல கலைஞர்களை அவர்கள் இருக்கும்போதே கொண்டாடத் தவறிய பழி தமிழ்ச் சமூகத்திற்கு உண்டு. தகுதி வாய்ந்த ஒருவர் விருதுகளைப் பெறுவதற்கு முன்னரே இறந்துவிட்டாரெனின், தாமதம் ஆனாலும் அவருக்குரிய கவுரவம் செய்யப்பட வேண்டும்.

அரசாட்சி
உனக்கு விருது வேண்டுமானால் நீதான் விண்ணப்பிக்க வேண்டும், என்னைத் தேடிவந்து வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் ஒருவகையான மன்னராட்சி தொனி இருக்கிறது. இந்த வழக்கத்தை உடனடியாக மாற்றுவதுதான் நல்ல அரசின், நல்ல அரசாட்சியின் செயல். தமிழக முதல்வர் இதைப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
புதுச்சேரி தேர்தல்.. முதல்வர் ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு.. முடிவுக்கு வருமா தொகுதி பங்கீடு? -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications