தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதை தடுக்க முடியாதவர்.. சீண்டிய கனிமொழிக்கு அண்ணாமலை கொடுத்த ரிப்ளை
சென்னை : கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இழிவுபடுத்தப்பட்டபோது தடுக்க முடியாத அண்ணாமலை தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார் என திமுக எம்.பி கனிமொழி விமர்சித்த நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில தேர்தல் பாஜக இணை பொறுப்பாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட முன்னாள் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கன்னட வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது அண்ணாமலை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை பாஜக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது. இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் நிறுத்தப்பட்டதை அமைதியாக வேடிக்கை பார்த்த அண்ணாமலைக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, "தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
கனிமொழியின் ட்விட்டர் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்வீட் செய்துள்ள அண்ணாமலை, "அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி கனிமொழி அவர்களே. ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா சுட்டிக்காட்டினார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா? "கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்" என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது. தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications