"சனாதன" சர்ச்சை.. உதயநிதி பேசியது சரியா? கார்த்தி சிதம்பரம் ஒரே போடு! என்ன சொன்னார் பாருங்க
சென்னை: சனாதனத்தை அழிக்க வேண்டும் என உதயநிதி பேசியிருந்தது தேசியளவில் விவாதமாக மாறியிருந்தது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் உதயநிதிக்கு ஆதரவாகக் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்ளே வந்துள்ளார். தமிழகத்தில் சனாதனம் என்ற சொல் எதைக் குறிப்பிடப் பயன்படுகிறது என்பதை அவர் விளக்கினார். மேலும், தமிழகத்தில் பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
சனாதனம் குறித்துக் கடந்த 2023ம் ஆண்டு உதயநிதி பேசியது பெரியளவில் சர்ச்சையானது. தேசியளவிலும் கூட இது எதிரொலித்தது. உதயநிதி மீது வழக்குகளும் கூட தொடரப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் உதயநிதிக்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார். மேலும், தமிழகத்தில் பிராமணர்கள் மீது அடக்குமுறை காட்டப்படுவதாகச் சொல்லப்படும் புகார்களுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

பிரமாணர்கள்
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில், "பிராமணர்கள் தமிழ்நாட்டில் ஒடுக்கப்படுகிறார்கள் எனச் சொல்வது ஏற்கும்படியாக இல்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.. பல முக்கிய துறைகளில் பிராமணர்களின் ஆதிக்கம் இருக்கிறது. அவர்கள் பெரிய தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், நடிகர்கள் என ஒவ்வொரு தொழிலும் இருக்கிறார்கள்
பிராமணர்களுக்கு எவ்விதப் பாகுபாடும் இல்லை. இது ஒரு தவறான கருத்து. இந்திய நிர்வாகத்தில், குறிப்பாக அரசு உயர் பதவிகளிலும், நீதித்துறையிலும் பிராமணச் சமூகத்தினரே அதிகமாக உள்ளனர். எனவே, பிராமணர்கள் மீது பாகுபாடு கட்டப்படுவதாகச் சொல்வதில் அர்த்தமே இல்லை. மேலும், தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு எதிராக வன்முறை எதுவும் நடப்பதில்லை..
இட ஒதுக்கீடு
மேலும், நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இந்தியாவில் பிராமணர்கள் மட்டுமே பொதுப்பிரிவினர் அல்ல. அதில் பல பிரிவினர் வருவார்கள். மேலும், இட ஒதுக்கீடு அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தனியார்த் துறைக்கு அல்ல. எனவே, இது போன்ற கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சனாதனம்
சனாதனம் என்பது தமிழ்நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல்ல இல்லை. நான் வட இந்தியர்களை விட அதிக இந்து. ஏனென்றால் தமிழ்நாட்டில் தான் அதிகக் கோவில்கள் உள்ளன. நாங்கள் கடவுளுக்காகத் தினமும் அதிகத் தேங்காய்களை உடைக்கிறோம். நான் விபூதி இல்லாமல் வீட்டை விட்டு ஒருநாள் கூட வெளியே செல்ல மாட்டேன். எங்கள் வீடுகளில் யாரும் பூஜை அறைக்கு வா சனாதனத்தைப் பின்பற்றுவோம் எனச் சொல்ல மாட்டார்கள்.
சாதியப் படிநிலை
இந்தச் சர்ச்சை எல்லாம் உதயநிதி சனாதனம் குறித்துப் பேசியதால் கிளம்பியது. தமிழ்நாட்டில் சனாதனம் என்றால் சாதிப் படிநிலை என்றே அர்த்தம். சனாதனம் என்ற சொல்லுக்கு வட இந்தியாவில் உள்ள அர்த்தம் வேறு.. இங்குள்ள அர்த்தம் வேறு. இங்கு மக்கள் சனாதனம் என்ற சொல்லைச் சாதிப் படிநிலையே குறிக்கப் பயன்படுத்துகிறார்கள்.. உதயநிதி தனது உரையில் சாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்து மட்டுமே பேசினார். அதை அழிக்க வேண்டும் என்றே குறிப்பிட்டார்.
இந்து மத நம்பிக்கை மற்றும் இந்து பழக்க வழக்கம் குறித்து யாருமே தமிழகத்தில் கேள்வி எழுப்புவதில்லை. தமிழ்நாட்டில் எந்தச் சமூகக் குழுவைச் சேர்ந்தவர்களும், எந்தப் பொருளாதாரப் பின்னணியில் உள்ளவர்களும், தங்கள் மத நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கும், வெளிப்படுத்துவதற்கும் முழுமையான சுதந்திரம் உள்ளது. தமிழ்நாட்டில் எனது மத நம்பிக்கையை வெளிப்படுத்தத் தடை உள்ளது என்று யாராலும் கூற முடியாது. அது முற்றிலும் தவறானது.












Click it and Unblock the Notifications