வாய்ப்பை இழந்த காங்கிரஸ்.. “ராஜினாமா செய்யுங்க!”.. வெடிக்கும் மோதல்.. கார்த்தி சிதம்பரம் வார்னிங்!
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி சொன்னதாகவும், ஆனால் நிர்வாகிகள் மறுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இப்படியான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும், எனவே இப்படி பேச வேண்டாம் என்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், கட்சியின் நிர்வாகிகளுக்கு வார்னிங் கொடுத்திருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரிய சூறாவளியாக வீசியிருக்கிறது. திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி மிகப்பெரிய கட்சியாக தவெக உருவெடுத்திருக்கிறது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாகவே தவெக உடன் கூட்டணி வைத்திருந்தால் காங்கிரஸ் அதிக தொகுதிகளை பெற்றிருக்கும் என்று பேச்சுகள் அடிப்பட்டிருக்கின்றன.

காங்கிரஸில் குழப்பம்
சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பதா? அல்லது தவெக உடன் சேர்ந்து போட்டியிடுவதா? என்று காங்கிரஸ் பெரிய குழப்பத்தில் இருந்தது. கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் பலரும் தவெக உடன் கூட்டணி வைக்கலாம் என வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர். இருப்பினும் தலைமை இதை அங்கீகரிக்கவில்லை. விஜய் உடன் பேசிய மேல் மட்ட தலைவர்கள், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தனர்.
5 தொகுதிகள் மட்டும்
தேர்தல் நெருங்கிய நிலையில், திமுக உடன் கூட்டணியை உறுதி செய்தனர். ஆனால், ஆட்சியில் பங்கு என்கிற டிமாண்டை வைத்திருந்தனர். திமுக அதை ரசிக்கவில்லை. இருப்பினும் காங்கிரஸின் தலைவர்கள் தொடர்ந்து வெளிப்படையாக ஆட்சியில் பங்கு என்கிற விஷயத்தை பேசி வந்தனர். இப்படி இருக்கையில்தான், தற்போது தேர்தல் ரிசல்ட் வந்திருக்கிறது. மொத்தமாக திமுக பெரிய தோல்வியடைந்திருக்கிறது. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
செல்வப்பெருந்தகை மற்றும் ப.சிதம்பரம்
இது கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மத்தியில் வேறுவிதமான அதிருப்தியை உருவாகிக்கியிருக்கிறது. அதாவது, திமுகவுடன் கூட்டணிக்கு போனது தப்பு என்றும், இந்த கூட்டணியை ஏற்பாடு செய்த ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை பதவி விலக வேண்டும் எனவும் பலரும் சோஷியல் மீடியாக்களில் எழுத தொடங்கினர்.
தற்போது தவெகவுக்கு கூடுதலாக எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படுவதால், அக்கட்சியுடன் பேசி கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கலாம் என்றும், இந்த பேச்சுவார்த்தைக்கு எக்காரணத்தை கொண்டும் செல்வப்பெருந்தகை அல்லது ப.சிதம்பரத்தை அனுப்பக்கூடாது என்றும் பேசி வருகின்னர்.
நிலைமை இப்படி இருக்கையில், திமுகவுடன் கூட்டணி வைக்கப்பட்டதற்கான பின்னணியை விளக்கியுள்ளார் கார்த்தி சிதம்பரம். இது தொடர்பாக அவர் பேசியதாக வெளியான ஆடியோவில்,
கார்த்தி சிதம்பரம் விளக்கம்
"காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்ததால், எல்லோரும் ராஜினாமா செய்ய வேண்டும் என சோஷியல் மீடியாக்களில் பலரும் எழுதுகின்றனர். ஆனால் ஒரு விஷயத்தை அவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும், திமுகவுடன் பயணிப்பது என்பது அனைத்து நிர்வாகிகளின் முடிவுதான். கூட்டணிக்கு முன்னதாக அனைத்து எம்பிக்கள், எம்எல்ஏக்களை அழைத்து இது குறித்து கருத்து கேட்டனர். அதேபோல நிர்வாகிகளிடமும் கருத்து கேட்கப்பட்டிருந்தது.
அனைவரின் கருத்தை பெற்றுக்கொண்டு, அதன் பின்னர் ஆலோசிக்கப்பட்டு இறுதியாகத்தான் காங்கிரஸ், திமுகவுடன் செல்வது என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை தன்னிச்சையாக எடுக்கவில்லை.
வார்னிங் கொடுத்த கார்த்தி சிதம்பரம்
திமுகவிடம் இத்தனை தொகுதிகளை வாங்க வேண்டும், இந்த இந்த தொகுதிகளை எல்லாம் கேட்டு பெற வேண்டும், அதில் குறிப்பிட்ட நபரைதான் வேட்பாளராக போட வேண்டும் என்று நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வலியுறுத்தி இருந்தார்களே தவிர, கூட்டணி வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. இருப்பினும் அது குறித்து தவறாக பலரும் தற்போது எழுத தொடங்கியிருக்கின்றனர்.
ஒரு சிலரின் வற்புறுத்தலின் பேரில்தான் திமுகவில் காங்கிரஸ் தொடர்கிறது எனில், இந்நேரம் கட்சி இரண்டாக உடைந்திருக்கும். எல்லோருமே திமுகவுடன் கூட்டணி வைப்பதைதான் விரும்பினர். எனவே இது குறித்து பொது வெளியில் அவதூறாக எழுத வேண்டாம்" என்று வார்னிங் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications