"கருணாநிதி ஒரு மாநில அரசியல்வாதி இல்லை.. தேசிய தலைவர்!" எழுந்து நின்று மரியாதை தந்த ராஜ்நாத் சிங்
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். கருணாநிதியை மிகச் சிறந்த நிர்வாகி என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அவர் மாநில அரசியல்வாதி இல்லை.. தேசிய தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவரும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக அவரது பெயரில் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகத்தான தலைவர் கருணாநிதிக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டுகிறேன் என்று கூறினார். இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று கைதட்டி கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினர்.
ராஜ்நாத் சிங்: அதன் பிறகு தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், "இந்தியாவின் டைட்டன் போன்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.. வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணிக்காத்தவர்.. கூட்டாட்சி தத்துவத்திற்கு அரும்பாடுபட்டவர்.. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு ஏற்படாமல் பாதுகாத்தவர் கருணாநிதி. கருணாநிதியின் அரசியல் பயணம் போராட்டம், துணிச்சல் மிக்கதாக இருந்தது.
கருணாநிதி மிகச் சிறந்த ஒரு நிர்வாகி.. மத்தியில் வெற்றிகரமான கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி. கூட்டாட்சி தத்துவத்தைக் காப்பதில் பெரும் பங்கு வகித்தவர் கருணாநிதி.. பஞ்சாப் முதல் தமிழகம் வரை அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த காலத்தில் தலைவராக உருவெடுத்தவர் கருணாநிதி.
உரிமையை பெற்று தந்தவர்: இங்குப் பலருக்கும் ஒரு விஷயம் தெரியாது. அதாவது முன்பு ஆளுநர் மட்டுமே தேசியக் கொடியை ஏற்றுவார். ஆனால், மாநில முதல்வர் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்று தந்தவர் கருணாநிதி. அதன்படி தமிழ்நாட்டில் முதல்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியவர் கருணாநிதி தான்
தேசிய தலைவர்: கருணாநிதி ஜனநாயகத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்... நாட்டின் தலைசிறந்த தலைவராக விளங்கினார். கருணாநிதி ஒரு மாநிலத்தின் அரசியல்வாதி இல்லை. தேசத்தின் தலைவராகப் பார்க்கப்பட்டார். 1960 முதல் இப்போது வரை திமுக மாநிலக் கட்சியாக வலுவாக இருக்க அடித்தளம் இட்டவர் கருணாநிதி. பல பிராந்திய கட்சிகள் மறைந்திருந்தாலும் திமுக இன்று வரை பலமாக இருக்க வித்திட்டவர் கருணாநிதி. வரலாற்றில் அழிக்கவே முடியாத பல சாதனைகளைப் புரிந்தவர்.
விளம்பு நிலை மக்கள் தரமான கல்வி வழங்கத் திட்டங்களைக் கொண்டு வந்தவர் கருணாநிதி. அனைவரும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகப் போராடியவர். ஒரு மாநில முதல்வராக அவர் கல்வி மீதும், உட்கட்டமைப்பு மீது அதிக கவனம் செலுத்தினார். அவர் கல்வி மீது நம்பிக்கை கொண்ட தலைவராக இருந்தார். கருணாநிதியின் பொது தொண்டு காரணமாக நாட்டிற்கே நன்மை ஏற்பட்டுள்ளது
நல்லுறவு: பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவைப் பேணி வந்தவர் கருணாநிதி.. 1989ம் ஆண்டிலேயே மகளிருக்கான சுய உLவி குழுக்களைக் கொண்டு வந்தார். மக்களின் குறைகளைக் கேட்க மனுநீதி திட்டத்தைக் கொண்டு வந்தவர். கலைஞரின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அவரது உழைப்பும்,திட்டங்களும். என்றென்றும் நினைவுகூரதக்கவை" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications