'என்றும் உறுதுணையாக' உதயநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த கருணாஸ்.. சொன்னதை கவனிச்சீங்களா
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த கருணாஸ், "என்றும் உறுதுணையாக முக்குலத்தோர் புலிப்படை" எனப் பதிவிட்டுள்ளது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன்- விளையாட்டுத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சருமாக இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 30 ஆம் தேதி துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சிகளை தொடர்ந்து திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உதயநிதி செல்லும் இடங்களில் எல்லாம் கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், தான் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கருணாஸ், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கும் கருணாஸ், "என்றும் உறுதுணையாக முக்குலத்தோர் புலிப்படை" எனப்பதிவிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருந்தாலும் கூட கருணாசின் இந்த பதிவு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்த கருணாஸ், தொடர்ந்து திமுகவிற்கு இணக்கமாகவே இருந்து வருகிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற திமுக பவள விழாக் கூட்டத்தில் கலந்து கொண்ட கருணாஸ், திமுகவை புகழ்ந்து தள்ளினார். சமூக நீதிக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் தொடர்ந்து போராடிவரக்கூடிய ஒரே இயக்கமாக திமுக உள்ளது எனவும், நூறாண்டு விழா கொண்டாட்டத்திலும் திமுக ஆட்சியில் இருக்கும். அன்றைய நாளில் என் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக இருப்பார்" என புகழாரம் சூட்டினார்.
கருணாஸ் தொடர்ந்து திமுகவிற்கு இணக்கமாக இருப்பது வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறாரா என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்து திருவாடனை தொகுதியில் போட்டியிட்ட கருணாஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications