"கோட் 4328".. கோடநாடு வழக்கில் வெளிவரும் 5 மொபைல் பூதம்.. தகிக்கும் சயான்.. மாட்டப்போவது யார்?
சென்னை: கோடநாடு வழக்கில் மிக முக்கியமான ஆதாரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் 5 மொபைல் போன்கள் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
கோடநாடு வழக்கில் மேல்விசாரணைகள் வேகம் பிடித்து உள்ளன. மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் வழக்கை துரிதமாக விசாரித்து வருகிறார்கள். வேறு வேறு கோணங்களில் போலீசார் இந்த வழக்கை விசாரிக்கிறார்கள். மேல் விசாரணைதான் என்றாலும் கிட்டத்தட்ட மறுவிசாரணை என்று கூறும் அளவிற்கு எல்லோரிடமும் மீண்டும் வாக்குமூலங்களை போலீசார் வாங்கி வருகிறார்கள்.
அதிலும் கடந்த முறை நடத்தப்பட்ட விசாரணையில் கண்டுபிடிக்க முடியாத பல ஆதாரங்கள், தகவல்களை இந்த மேல் விசாரணையில் போலீசார் கண்டுபிடித்து வருகிறார்கள். இது வழக்கில் கண்டிப்பாக வரும் நாட்களில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்கும் முடிவில் தமிழ்நாடு அரசு இருக்கிறது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டதற்கும் கூட இதுவே காரணமாக பார்க்கப்படுகிறது.

திருப்பம்
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமைய போவது 5 செல்போன்கள் என்று கூறப்படுகிறது. இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கியமான குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் கனகராஜ். இவர் கொலை நடந்த சில நாட்களிலேயே மர்மமான சந்தேகத்துக்கு உரிய விபத்தில் சிக்கி பலியானார். இவரின் காரில் இருந்து சில ஆவணங்கள் எடுக்கப்பட்டது. அதோடு இவரிடம் இருந்த போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போன் இப்போது எங்கே என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

சயான்
அதன்பின் சில நாட்களில் கேரள மாநிலம் பாலக்காட்டில் சயான் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இவரின் காரில் பயணித்த மனைவி, மகன் பலியானார்கள். இந்த விபத்துக்கு பின் சிறைக்கு சென்ற சயானின் போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் இருந்து ஒரு ஐபோன் உட்பட இரண்டு போன் போலீசார் மூலம் அப்போது பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு கோடநாடு எஸ்டேட்டில் வேலை பார்த்து தூக்கு மாட்டி மர்மமான முறையில் தினேஷ் என்பவர் பலியானார். இவரின் போனும் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டது.

மொத்தம் 5
இன்னொரு சாட்சியத்தின் போன் உட்பட மொத்தம் 5 போன்களை போலீசார் இந்த வழக்கில் விசாரணைக்காக கைப்பற்றி உள்ளனர். ஆனால் இதை இதுவரை போலீசார் ஊட்டி கோர்ட்டில் சாட்சியமாக சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. தன்னுடைய போனை போலீசார் வாங்கியதாகவும் ஆனால் நீதிமன்றத்தில் இதுவரை அதை சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறி சயான் புகார் அளித்துள்ளார். கடந்த வாரமே நீதிமன்ற விசாரணையின் போது என்னுடைய போன் எங்கே என்று கூறி போலீசாரிடம் இவர் வாக்குவாதம் செய்தது குறிப்பிடத்தக்கது .

வெளியே வருமா?
என்னிடம் வாங்கிய போனை கோர்ட்டில் கொடுக்கவில்லை.. என்னிடமும் தரவில்லை என்று சயான் கடந்த முறை ஊட்டி கோர்ட்டில் தகிப்புடன் பேசினார். இந்த நிலையில்தான் அவர் ஐபோனின் பாஸ்வேர்ட் 4328 என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இந்த ஐபோன் மூலம் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கனகராஜ் தொடர்பான சில முக்கியமான போட்டோக்கள், ஆடியோ ரெக்கார்ட்கள் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போன்களை போலீசார் ஆதாரமாக தாக்கல் செய்தால் அது பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும்.

யாருக்கு சிக்கல்?
ஆனால் போலீசார் ஏன் இன்னும் இதை தாக்கல் செய்யவில்லை என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இந்த வழக்கில் ஒருவேளை போன் ஆதாரங்கள் வெளியே வந்தால் யார் அதில் மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் அனைத்து ஆதாரங்களையும் விசாரித்து உண்மையை கொண்டு வரும் முனைப்பில் இருப்பதால் போலீஸ் இது போன்ற ஆதாரங்களை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4328 பாஸ்வேர்ட் அடங்கிய அந்த போன் வெளியே வரும் பட்சத்தில் பல பூதங்கள் அதில் இருந்து கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications