ஆபரே“சன்” கொங்கு.. சூரியன் பக்கம் சாயும் “3 இலைகள்”! டென்சனில் தலைகள் - திமுக எம்பி கான்ஃபிடண்ட்
சென்னை: அதிமுகவை சேர்ந்த கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தருமபுரி எம்.பி. செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.
கடந்த மே மாதம் திமுக எம்பி திருச்சி சிவா மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார், திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜகவுக்கு ஒரு தகவல்.
உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் துக்கிவிடுவோம்." என்று பதிவிட்டார். அந்த சமயத்தில் செந்தில்குமாரின் இப்பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார் செந்தில்குமார். அதில், மூன்று இரட்டை இலைகளின் எமோஜி அடுத்து ஒரு அம்பு குறி எமோஜி அடுத்து ஒரு உதயசூரியம் எமோஜியை பதிவிட்டு இருக்கிறார். அதிமுகவை சேர்ந்த 3 பேர் திமுகவுக்கு வரப்போவதாக குறிக்கும் வகையில் அந்த அந்த பதிவு இருந்தது.

மேற்கு மண்டல எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதையே செந்தில்குமார் சூசகமாக தெரிவித்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மூவரும் திமுகவில் இணையவிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆபரேசன் கொங்கு
இந்த நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில்குமாரிடம் அதிமுகவினர் திமுகவில் இணைவார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "கொங்கு மண்டல அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் திமுகவில் இணைய இருக்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது." என்றார்.

திமுகவில் ஆறுகுட்டி
கடந்த மாதம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுகவின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி திமுகவில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியபோது, அவரது அணியில் இருந்த ஆறுகுட்டி, பின்னர் எடப்பாடி பழனிசாமியின் அணிக்கு தாவினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஆறுகுட்டி, எடப்பாடி அணியில் தொடர்ந்து இருந்து வந்த நிலையில் கட்சி தாவியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications