பிரஸ் மீட்டில் சிரிப்பலை! எங்க ஆபீஸ்ல இருந்து ‘லீக்’கா? காமராஜர் கட்டிய கட்டடம்.. அழகிரி கூல் பதில்!
சென்னை: காங்கிரஸ் தரப்பில் இருந்து திமுகவிடம் தொகுதி லிஸ்ட் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்த கேள்விக்கு கிண்டலாக பதில் அளித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.
லோக்சபா தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. காங்கிரஸ் சார்பில், முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 9 தொகுதிகள் மற்றும் மேலும் 12 தொகுதிகள் கொண்ட 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக பேச்சுவார்த்தைக் குழுவினரிடம் கொடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை காங்கிரஸ் கட்சி மறுத்து அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது எத்தனை இடங்கள் கேட்டீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கே.எஸ்.அழகிரி, "அது எங்களுக்கும் திமுகவுக்கும் இடையேயான பேச்சு. அதனை வெளியில் சொல்வதில்லை என இரு தரப்பும் ஒருமித்து முடிவு செய்துள்ளோம். அதையே தான் வெவ்வேறு மொழிகளில் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது? எவ்வாறு வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது? எந்த விதமான தேர்தல் பரப்புரையைச் செய்வது? அதிமுக, பாஜகவை தேர்தலில் எதிர்கொள்வது என்பது குறித்தெல்லாம் ஆலோசித்தோம். நம்முடன் உள்ள கூட்டணிக் கட்சிகளை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது பற்றி விவாதித்தோம்" என்றார்.
21 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் கொடுக்கவில்லை என காங்கிரஸ் சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கே.எஸ்.அழகிரி, "நீங்கள் பொய் செய்தி வெளியிட்டிருக்கிறீர்கள். நீங்களே எழுதி நீங்களே வெளியிட்டுள்ளீர்கள். நாங்கள் யாருக்கும் கொடுக்கவில்லை. நாங்கள் பட்டியல் கொடுத்தால் எங்கள் கட்சி லெட்டர் ஹெட்டில் என் கையெழுத்துடன் கொடுப்போம். நீங்களே திரைக்கதை வசனம் எழுதி ஒன்றை வெளியிட்டு நீங்களே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்" என்றார்.
உங்கள் அலுவலகத்தில் இருந்துதான் அந்த பட்டியல் லீக் ஆகியுள்ளது என செய்தியாளர்கள் தெரிவிக்க, அதற்கு கூலாக பதில் அளித்த கே.எஸ்.அழகிரி, "எங்கள் அலுவலகத்தில் லீக்கே ஆகாது. அது காமராஜர் கட்டிய கட்டிடம். நீங்கள் வேண்டுமென்றால் எவ்வளவு தண்ணீரை வேண்டுமென்றாலும் ஊற்றிப் பாருங்கள். லீக்கே ஆகாது" என கிண்டலாக கூறினார். இதனால் பிரஸ் மீட்டில் சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications