எல்லோர் கண்ணும் அதுலதான்.. நெருங்கும் தேர்தல்! எல்.முருகன் சொன்ன 'அந்த' 9 தொகுதி.. டார்கெட் இதுதான்
சென்னை: தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகளை பாஜக டார்கெட் வைத்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியிருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தற்போது வரை இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. நரேந்திர மோடியும் இரண்டாவது முறை பிரதமராக இருக்கும் நிலையில், எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராகிவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருகிறார். கட்சியும் இதற்காக ப்ளான்களை பக்காவாக போட்டு செயல்படுத்த தொடங்கியிருக்கிறது. இந்த ப்ளான் ஒர்கவுட் ஆனால், நேருவுக்கு பிறகு 3வது முறையாக பிரதமராகும் நபர் என்கிற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி பெறுவார்.
ஆனால் களம் மிகவும் சவால் மிகுந்ததாக இருக்கிறது. எனவே மத்திய அமைச்சர்களை களத்தில் இறக்கி தேர்தல் பணிகள், பூத் கமிட்டி வேலைகள், அரசுத் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தல், கட்சித் தலைவர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை சீரான வேகத்தில் முன்னெடுத்து செல்ல பாஜக திட்டமிட்டிருக்கிறது. நாடு முழுவதும் 150 தொகுதிகள் 'கவனம் செலுத்தும்' தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த தொகுதியில்தான் அமைச்சர்கள் பணியாற்றுவார்கள்.

கூட்டணி
இதில் பெரும்பாலான தொகுதிகள் வட இந்தியாவில் இருந்தாலும் 9 தொகுதிகள் தமிழ்நாட்டில் இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "நேற்று நான் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்திருந்தேன். இது வழக்கமான ஒரு சந்திப்புதான்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "பாஜக-அதிமுக கூட்டணி குறித்து பத்திரிகையாளர்களுக்கு சந்தேகம் இருப்பதை போல தெரிகிறது. எங்கள் கூட்டணி வலுவாக இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி மாநில தலைவர் அண்ணாமலை வரை அனைவரும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதிமுக
கூட்டணி கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் இதனை உறுதி செய்துள்ளார். கட்சியின் கூட்டத்தில் சில விஷயங்களை விவாதிப்பது இயல்பானது. இன்று பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துக்கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் மாநில தலைவர் கருத்தை கூறியிருந்தார். இதில் எந்தவிதமான சர்ச்சையும் இருப்பதாக நான் கருதவில்லை. இதே மாநில தலைவர்தான் பாஜக-அதிமுக கூட்டணியில் இருக்கிறது என்பதை உறுதி செய்து கூறியுள்ளார். எனவே கூட்டணி குறித்த சலசலப்புகள் முடிவுக்கு வந்துள்ளன.

9 தொகுதிகள்
ஆனால் திமுக கூட்டணியில் இதைவிட அதிக அளவில் சலசலப்புகள் இருக்கின்றன. எனவே பத்திரிகையாளர்கள் திமுகவிடம் இதே கேள்வியை கேட்க வேண்டும். எங்கள் கட்சி தலைமை 150 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. அதில் வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு வியூகங்களையும் வகுத்து வருகிறது. இந்த 150 தொகுதிகள் லிஸ்ட்டில் தமிழ்நாட்டிலிருந்தும் 9 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு மோடி அலை வீசுகிறது என்று பாஜக பிரசாரத்தை மேற்கொண்டது. அப்போது ஒட்டுமொத்தமாக 282 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. இதே கடந்த 2019ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 303ஆக அதிகரித்தது.

இலக்கு
இந்த தேர்தலில் இந்த 400க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக இலக்கு வைத்திருக்கிறது. எனவே இதற்காக தீவிரமாக இயங்கி வருகிறது. ஆனாலும், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்ததால் பாஜகவுக்கு எதிரான மனநிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். மட்டுமல்லாது சில செயல்பாடுகள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது எனவும், இந்த மனோ நிலை காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுக்கு சாதகமானதாக மாறியிருக்கிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே இந்த தேர்தல் பாஜகவுக்கு மிகுந்த சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications